சிறப்புக் கட்டுரைகள்
null

குடும்ப மகிழ்ச்சிக்கு வழி!

Published On 2024-01-08 12:15 GMT   |   Update On 2024-01-08 12:22 GMT
  • ஒன்றாய் அமர்ந்து, உணவினைப் பகிர்ந்து நேரத்தினை செலவிடுவதுதான் இணைப்பு.
  • உங்கள் சகோதர, சகோதரியுடன் நீங்கள் தொடர்பில் இருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் யாரும் இணைப்பில் இல்லை என்றார்.

ஒரு துறவியிடம் நியூயார்க் பத்திரிகையாளர் ஒருவர் பேட்டி எடுத்தார்.

நிருபர்: ஐயா உங்களுடைய முந்தைய சொற்பொழிவில் 'தொடர்பு' மற்றும் 'இணைப்பு பற்றி பேசினீர்கள். அது உண்மையிலேயே மிகவும் குழப்பமாய் இருந்தது. சற்று விளக்கமாக சொல்ல முடியுமா?" என்றார்.

துறவி : புன் முறுவலோடு நிருபர் கேட்ட கேள்வியில் இருந்து விஷயத்தை திசை திருப்பும் விதமாக, அந்த நிருபரிடம் கேள்வி கேட்டார். 'நீங்கள் நியூயார்க்கில் தானே வசிக்கின்றீர்கள்?'

'ஆம்'

துறவி: வீட்டில் யாரெல்லாம் இருக்கின்றார்கள்?

'இந்த துறவி என் சொந்த வாழ்வைப் பற்றியும் தேவையற்ற கேள்விகளைக் கேட்டும் என்னுடைய கேள்விக்கு பதில் சொல்வதனைத் தவிர்க்கின்றார் என்று நிருபர் நினைத்தார்.

இருந்தாலும் துறவியின் கேள்விக்கு, "என் தாயார் இறந்து விட்டார். தந்தையார் இருக்கிறார். மூன்று சகோதரர்கள், ஒரு சகோதரி இருக்கின்றனர். அனைவருக்கும் திருமணம் ஆகி விட்டது" என்று பதிலளித்தார்.

துறவி: முகத்திலே, புன்னகையுடன் 'நீங்கள் உங்கள் தந்தையுடன் பேசுகின்றீர்களா?' என்று கேட்டார்.

இப்போது நிருபர் எரிச்சல் அடைந்து விட்டார்.

துறவி: "கடைசியாக எப்போது அவரிடம் பேசினீர்கள்.

நிருபர்: எரிச்சலை அடக்கிக் கொண்டு 'ஒரு மாதத்திற்கு முன் இருக்கலாம்' என்றார்.

துறவி: 'உங்களுடைய சகோதர, சகோதரிகளை அடிக்கடி சந்திப்பதுண்டா?' 'குடும்பமாக சந்தித்தது கடைசியாக எப்போது?' என்றார்.

இப்போது அந்த நிருபர் நெற்றியில் வியர்க்க ஆரம்பித்தது. இதைப் பார்த்தால் துறவிதான் நிருபரை பேட்டி எடுப்பது போல் இருந்தது. நீண்ட பெரு மூச்சுடன் நிருபர் சொன்னார். 'இரண்டு வருடங்களுக்கு முன் கிறிஸ்துமஸ் சமயத்தில் சந்தித்தோம்'.

துறவி: எல்லோரும் சேர்ந்து எத்தனை நாட்கள் இருந்தீர்கள்?'

புருவத்தின் மீது வடிந்த வியர்வையை துடைத்தவாறு நிருபர் 'மூன்று நாட்கள்' என்றார்.

துறவி: 'உங்களுடைய அப்பாவின் அருகில் அமர்ந்து அவரோடு எவ்வளவு நேரம் செலவழித்தீர்கள்?'

இப்போது நிருபர் பதட்டத்துடனும், சங்கடத்துடனும் ஒரு காகிதத்தில் ஏதோ கிறுக்க ஆரம்பித்தார்.

துறவி: 'எலலோரும் ஒன்றாக அமர்ந்து காலை உணவோ, மதிய உணவோ, இரவு உணவோ ஒன்றாக சாப்பிட்டீர்களா?'

கமலி ஸ்ரீபால்

 'அம்மா இறந்த பிறகு நாட்களை எப்படி கழிக்கின்றீர்கள் என்று அப்பாவிடம் ஆறுதலாய் கேட்டீர்களா?'

இப்போது நிருபரின் கண்களில் இருந்து கண்ணீர் வடியத் தொடங்கியது.

துறவி அந்த நிருபரின் கைகளை பற்றியவாறு கூறினார். 'சங்கடப் படாதீர்கள். மனம் உடைந்து போகாதீர்கள். கவலையும் கொள்ளாதீர்கள். தெரியாமல் உங்கள் மனதை நான் புண்படுத்தி இருந்தால் என்னை மன்னியுங்கள். ஆனால் இதுதான் நீங்கள் 'தொடர்பு மற்றும் இணைப்பு பற்றி கேட்ட கேள்விக்கான பதில்'.

நீங்கள் உங்கள் அப்பாவோடு தொடர்பில் இருக்கின்றீர்கள். ஆனால் அவரோடு நீங்கள் இணைப்பில் இல்லை.

நீங்கள் அவரோடு இணைக்கப்படவில்லை. இணைப்பு என்பது இதயத்திற்கும் இதயத்திற்கும் இடையே இருப்பது...

ஒன்றாய் அமர்ந்து, உணவினைப் பகிர்ந்து நேரத்தினை செலவிடுவதுதான் இணைப்பு.

உங்கள் சகோதர, சகோதரியுடன் நீங்கள் தொடர்பில் இருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் யாரும் இணைப்பில் இல்லை என்றார்.

இப்போது நிருபர் கண்களை துடைத்துக் கொண்டு, 'எனக்கு அருமையான மறக்க முடியாத பாடத்தினை சொல்லிக் கொடுத்ததற்கு நன்றி ஐயா' என்றார். இது இன்றைக்கும் அநேக வீடுகளில் நிஜம்தான். தொடர்பு இருக்கின்றது. இணைப்பு இல்லை. இதனால் அன்பும் மங்குகின்றது. இதனை அனைவரும் முனைந்து மாற்ற வேண்டும்.

சரி. அந்த துறவி யார் தெரியுமா? 'சுவாமி விவேகானந்தர்' தான். ஒரு வீட்டில் பெண் மட்டும் அதாவது அந்த குடும்ப தலைவி ஒரு பதட்டமாகவே இருப்பார்.

கணவன், பிள்ளைகள், மற்ற உறவுகள் பற்றி எப்போதுமே ஒரு பதட்ட ஓட்டம் இருக்கும். கோபப்படுவர். எரிச்சல் படுவர். அனைவரும் அவளிடம் அனைத்து வேலையினையும் அடிமைப் போல் பெற்றுக் கொள்வர். பிறகு 'ரொம்ப டென்ஷன் பார்ட்டி' எனறு பட்டம் சூட்டுவர்.

இப்படித்தான் ஒரு வீட்டில் ஒரு பெண்மணி இருந்தாராம். திடீரென அந்த பெண்மணி மாறி விட்டார். கோபம் இல்லை, சத்தம் இல்லை. மிக அமைதியாக இருந்தார்.

ஒருநாள் அவரது கணவர் அந்தப் பெண்ணிடம் 'நானும் என் நண்பர்களும் மது அருந்த செல்கின்றோம்' என்று கூறினார். அந்தப் பெண்மணி அமைதியாய் இருந்தார்.

பிள்ளை வந்து அம்மாவிடம் 'நான் எல்லா பாடங்களிலும் பெயில் என்றான். ஒழுங்காய் படித்தால் எல்லாம் முடியும். முடியவில்லை என்றால் மீண்டும் அதே வகுப்பில்படி' என அமைதியாகக் கூறினார்.

கணவனுக்கு ஆச்சர்யம். நண்பர்களை சந்திக்க செல்கின்றேன். என்றாலே நூறு நிபந்தனைகள் போடும் தன் மனைவி 'குடிக்கப் போகிறேன்' என்று சொல்லி கூட அமைதியாய் இருக்கின்றாளே. எப்படி? எனக்குழம்பினார்.

ஒரு பாடத்தில் மார்க் குறைந்தாலே காது இரண்டையும் திருகி கழட்டி விடும் தன் அம்மா 'அனைத்து பாடங்களிலும் பெயில்' என்று சொன்ன போதும் மீண்டும் அதே வகுப்பில் படி' என்கிறாரே என்ன ஆயிற்று அம்மாவிற்கு?- மண்டை குழம்பியது.

இது மட்டுமா? மகள் ஓடி வந்தாள். 'அம்மா காரை நான் விபத்துக் குள்ளாக்கி விட்டேன்' என்றாள்.

பெண்மணி அமைதியாக 'கொண்டு போய் ரிப்பேர் செய்து விடு' என்றாள். வீட்டில் பூகம்பமே வெடிக்கும் என எதிர்பார்த்து பயந்து வந்த மகளுக்கு அம்மாவின் அமைதி மேலும் பயத்தினை அதிகரித்தது.

குடும்பத்தினர் அப்பெண்மணியின் உடல், மன நலம் குறித்து கவலை கொண்டனர்.

ஒருநாள் அப்பெண்மணியே எல்லோரையும் அழைத்து பேசினார்.

சில உண்மைகள் புரிய எனக்கு நீண்ட காலம் எடுத்தது.

'அவரவர் வாழ்க்கைக்கு அவரவரே பொறுப்பு'

'என்னுடைய கோபம், என்னுடைய பதற்றம். என்னுடைய மன அழுத்தம், என்னுடைய தைரியம் எதுவும் உங்கள் பிரச்சினைகளை தீர்க்கப் போவதில்லை.

அவை என் ஆரோக்கியத்தினைக் கெடுத்து என் பிரச்சினைகளைத்தான் அதிகரிக்கும்.

என் அன்பையும், தைரியத்தையும் மட்டுமே என்னால் உங்களுக்கு கொடுக்க முடியும்.

உங்களுக்குத் தேவைப்பட்டால் என் அறிவுரைகளைத் தருவேன்.

உங்களுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்வேன்.

ஆனால் உங்கள் வாழ்க்கையை நான் வாழ முடியாது.

ஏனெனில் என்னை சார்ந்து இப்பிறவியினை நீங்கள் எடுக்கவில்லை. இது உங்களுக்கு கிடைத்துள்ள வாழ்க்கை. உங்கள் பிரச்சினைகளுக்கு நீங்கள்தான் பொறுப்பு கூறல் வேண்டும்.

உங்கள் பிரச்சினைகளை களைந்து உங்கள் மகிழ்ச்சியினை நீங்களே தேடுமளவுக்கு நீங்கள் எல்லா அறிவினையும் பெற்று உள்ளீர்கள். ஆகவேதான் நான் அமைதி ஆகிவிட்டேன் என்றார்.

குடும்பம் அசைவற்று நின்றது. அன்று முதல் அனைவரும் பொறுப்போடு தங்கள் வாழ்க்கையினை வாழத் தொடங்கினர்.

பலர் இதனை முன்பே படித்து ஒதுக்கி இருக்கலாம். ஒவ்வொரு வீட்டிலும் ஒரு பெண்தான் மற்றவர்களின் பொறுப்புகளை சுமக்கிறாள். இதனால்தான் அவள் உடல், மன நலம் பாதிக்கப்படுகின்றது. எல்லா நோய்களும் அவளை எளிதில் தாக்குகின்றன.

இதனை ஒவ்வொரு பெண்ணும் உணர வேண்டும். ஆணும் உணர வேண்டும். உணர்ந்தாலே போதும். நம்முள் ஒளி சக்தி கூடும்.

Tags:    

Similar News

பயமே ஜெயம்!