சிறப்புக் கட்டுரைகள்
null

டாடாவின் வெற்றி ரகசியம்!

Published On 2024-01-24 12:20 GMT   |   Update On 2024-01-24 12:29 GMT
  • சிறந்த மனிதர்களை இங்கு வரவழைப்பது நமது பெரும் பாக்கியமன்றோ என்றார் மன்னர்.
  • மிகப் பெரும் சான்றாக விளங்குபவர் ஜாம்ஷெட்ஜி டாடா.

சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ஒரு சம்பவம். கி.பி.பத்தாம் நூற்றாண்டில் குஜராத்தை ஆண்டு வந்தார் மாமன்னர் ஜடி ராணா. அப்போது பெர்சியாவிலிருந்து முகலாயர் தாக்குதலில் தப்பி வந்த பார்சிக்கள் குஜராத்தின் சஞ்ஜன் துறைமுகத்தை வந்தடைந்தனர். பார்சிக்களின் தலைவர், நாட்டில் உள்ளே வந்து குடியேற அனுமதி தருமாறு கேட்டு ஒரு தூதுவரை மன்னர் ராணாவிடம் அனுப்பினார். சற்று யோசித்த மன்னர் ஒரு கோப்பையில் பாலை நிரப்பி அதை தூதுவரிடம் கொடுத்து தலைவரிடம் கொடுக்கச் சொல்லி அனுப்பினார்.

தலைவர் அந்தக் கோப்பையை வாங்கி ஒரு கணம் யோசித்தார். பின்னர் சிறிது சர்க்கரையை அள்ளி அதில் போட்டு மன்னரிடம் கொண்டு சென்று தருமாறு தூதுவரிடம் கூறினார்.

நடந்ததைக் கேட்டார் மன்னர். பிறகு புன்முறுவல் பூத்தார். அனைவரையும் நாட்டிற்குள்ளே வந்து தங்குமாறு அழைப்பு விடுத்தார்.

அனைவருக்கும் ஒன்றும் புரியவில்லை. எதற்கு கோப்பையில் பாலை மன்னர் நிரப்பினார், அதற்குள் எதற்கு சர்க்கரையை பார்சிக்களின் தலைவர் போட்டார் என்று.

மன்னரே விளக்கினார். நாட்டில் குடியேற அனுமதி கேட்ட போது எங்கள் நாடே முழுவதுமாக மக்களால் நிரம்பி இருக்கிறது என்பதைக் குறிக்க கோப்பையில் பாலைத் தளும்பத் தளும்ப விட்டு நிரப்பி அனுப்பினேன். அதற்கு அந்தத் தலைவர் பாலில் சிறிது சர்க்கரையைப் போட்டார். சர்க்கரை எப்படி பாலில் கரைந்து விடுகிறதோ அது போல உங்கள் மக்களுடன் மக்களாக நாங்கள் கலந்து கரைந்து விடுவோம். அதுமட்டுமல்ல, சர்க்கரை எப்படி இனிப்புடன் சுவையைக் கூட்டுகிறதோ அது போல உங்கள் நாட்டில் வாழும்போது அனைவரது வாழ்க்கையையும் மேம்படுத்த உழைப்போம் என்றார் அவர்.

இதுபோன்ற சிறந்த மனிதர்களை இங்கு வரவழைப்பது நமது பெரும் பாக்கியமன்றோ என்றார் மன்னர்.

அன்று பெர்சியாவில் இருந்து (இன்றைய ஈரான், ஈராக்) இந்தியாவிற்கு வந்த பார்சிகள் சொன்ன சொல் தவறாமல் இந்திய நாட்டின் வளப்பத்தையும் பண்பாட்டையும் மேம்படுத்திக் கொண்டே வருகின்றனர்.

இதற்கு மிகப் பெரும் சான்றாக விளங்குபவர் ஜாம்ஷெட்ஜி டாடா.

ஜாம்ஷெட்ஜி நுசர்வாஞ்சி டாடா குஜராத் மாநிலத்தில் உள்ள நவ்சாரி என்ற இடத்தில் 1839-ம் ஆண்டு மார்ச் மாதம் 3-ந் தேதி நுசர்வாஞ்சி மற்றும் ஜீவன்பாய் டாடாவிற்கு மகனாகப் பிறந்தார். இவரது குடும்பம் மிக்க ஏழ்மையான ஒரு புரோகிதர் குடும்பம்.

இளமையிலேயே படிப்பதில் ஆர்வமும் அனைத்தையும் உடனே அறியும் கூர்மையான அறிவுத் திறனையும் கொண்டிருந்தார் டாடா. அவர் மேலைநாட்டுக் கல்வித்திட்டத்தின்படி கல்வியைக் கற்றார்.

வழக்கமாக குடும்பம் செய்து வந்த புரோகிதத்தை ஏற்காமல் முதன் முதலாக வணிகத்தில் குடும்பம் ஈடுபட அவர் காரணமானார்.

படிக்கும் போதே ஹீராபாய் டாபூவை அவர் மணந்தார், அவரது தந்தையார் ஓபியம் வணிகத்திற்காக சீனாவிற்கு அடிக்கடி சென்று வந்தார். தனது மகனை அதில் ஈடுபடுத்த நினைத்த அவர் டாடாவை சீனாவிற்கு அனுப்பினார். ஆனால் சீனா சென்ற டாடா ஓபியத்தை விட பருத்தி வாணிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டார். அதில் தேர்ச்சியும் பெற்றார்.

தொழிற்சாலைகளின் வளர்ச்சி:

29 வயது முடிய தந்தையுடன் வணிகம் செய்து வந்த டாடா 1868-ல் தனியாக தனது நிறுவனத்தை ஆரம்பித்தார். 1869-ல் சிஞ்ச்போக்லி என்ற இடத்தில் திவாலாகி இருந்த ஒரு பஞ்சாலையை வாங்கிய அவர் அதை அலெக்ஸாண்டிரியா மில் என்று பெயர் மாற்றம் செய்தார். இரண்டே வருடங்களில் அதை லாபம் கொழிக்குமாறு செய்து, பின்னர் விற்றார்.

1874-ல் பெரிய அளவில் ஒரு பஞ்சாலையைத் தொடங்கினார். நாக்பூரை சரியான இடமாக அவர் தேர்ந்தெடுத்ததை மற்றவர்கள் ஆச்சரியமாகப் பார்த்தனர். ஆனால் உற்பத்திச் செலவு, போக்குவரத்துச் செலவு ஆகியவற்றை வெகுவாகக் குறைத்து லாபத்தை ஈட்டி அனைவரையும் பிரமிக்க வைத்தார் அவர். பின்னர் அவர் மனதில் இரும்பு எக்கு தொழிற்சாலையை உருவாக்கும் எண்ணம் தோன்றியது...

டாடா அயர்ன் அண்ட் ஸ்டீல் பிளாண்ட் ஜார்கண்டில் சாக்க்ஷி கிராமத்தில் தொடங்கியது. பிரம்மாண்டமான அளவில் அது வளர்ந்தது, கிராமம் பின்னர் பெரிய நகராக மாறி டாடா நகர் என்ற ரெயில் நிலையம் உருவாகும் அளவு வளர்ந்தது. இப்போது பெரும் நகரமாக ஜாம்ஷெட்பூர் என்ற பெயரில் விளங்குகிறது.

இதைத் தொடர்ந்து டாடா குடும்பம் பெரிதாக வளர்ந்தது. பல்வேறு துறைகளில் இந்தக் குடும்பம் முத்திரை பதித்து விட்டது. இன்று சுமார் 29 பொது நிறுவனங்களைக் கொண்டுள்ளது டாடா குடும்பம். இதன் வருடாந்தர மொத்த வருமானம் 12 லட்சத்து 45 ஆயிரம் கோடி ரூபாய். பத்து லட்சம் பேர் இந்த நிறுவனங்களில் இப்போது வேலை பார்த்து வருகின்றனர்.

பாரதத்தின் முதல் பிரதம மந்திரி ஜவஹர்லால் நேரு இவரை ஒன் மேன் பிளானிங் கமிஷன் - ONE MAN PLANNING COMMISSION என்று பாராட்டினார். இந்திய தொழில்துறையின் தந்தை என்று பொருத்தமான பெயரால் இவர் இன்று அறியப்படுகிறார்.

சுவாமி விவேகானந்தருடன் சந்திப்பு!

1893-ம் ஆண்டு மே மாதம் 31-ந் தேதி யோகோஹாமாவிலிருந்து வான்கூவருக்குச் சென்று கொண்டிருந்த கப்பலில் சுவாமி விவேகானந்தரைச் சந்தித்தார் ஜாம்ஷெட்ஜி. சிகாகோவில் நடந்து கொண்டிருந்த தொழில் கண்காட்சி ஒன்றில் கலந்து கொள்ளச் சென்று கொண்டிருந்தார் அவர். சுவாமி விவேகானந்தர் தங்கி இருந்த அதே ஓட்டலில் சில நாட்களுக்கு முன்பாகவே வந்து தங்கியிருந்தார் டாடா. சுவாமிஜியுடன் பேசுவதற்கான வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. சுவாமிஜியின் பேச்சால் உத்வேகம் பெற்ற டாடா கல்வி நிறுவனங்களையும் ஆய்வு நிறுவனங்களையும் தொடங்க உத்வேகம் பெற்றார்.

டாடா 23-11-1898 தேதியிட்ட ஒரு கடிதத்தை எஸ்பிளேட் ஹவுஸ், பாம்பேயில் இருந்து எழுதி சுவாமி விவேகானந்தருக்கு அனுப்பினார்.

அதில் அவர் கூறியிருந்ததாவது:-

ஜப்பானில் இருந்து சிகாகோவிற்கு சென்ற கப்பலில் என்னை கூட வந்த பயணியாக நீங்கள் சந்தித்ததை நினவில் வைத்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.... எனது அறிவியல் ஆய்வு இன்ஸ்டிடியூட்டை ஆரம்பிக்கும் திட்டத்தைப் பற்றிய கருத்துக்களை இப்போது நினைவு கூர்கிறேன்.

அறிவியலுக்கான ஒரு பெரும் இயக்கத்தைத் தொடங்க கடுமையான விரதம் கொண்ட ஆன்மிக துறவியான உங்களை விடத் தகுதியானவர் வேறொருவர் யாராக இருக்க முடியும்? இந்தத் திட்டத்திற்கான செலவு முழுவதையும் நான் ஏற்றுக் கொள்கிறேன்" என்று எழுதியிருந்தார்.

சுவாமிஜி உடனடியாக சகோதரி நிவேதிதா தேவியை அவரிடம் அனுப்பி ஆய்வு நிறுவனம் ஒன்றை அமைப்பதற்கான விரிவான திட்டத்தை உருவாக்க வழி கோலினார். 1902-ல் சுவாமிஜி மறைய, அதற்கு இரண்டு வருடங்கள் கழித்து டாடா மறைந்தார். என்றாலும் அவர்கள் கனவு கண்டு உருவாக்க உழைத்த அறிவியல் நிறுவனம் 1909-ல் டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் என்ற பெயரில் உருவானது. அதுவே இன்று நாம் அறியும் இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் என்று 1911-ல் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

தான் சம்பாதித்த பணத்தை கல்விக்காகவும் சுகாதார மேம்பாட்டிற்காகவும் தாராளமாக நன்கொடையாக 1892-ம் ஆண்டில் இருந்து வழங்க ஆரம்பித்தார் டாடா.

ஒரு பிரமிக்க வைக்கும் செய்தியை 2021-ல் உலக நன்கொடையாளர்கள் பட்டியலைத் தயார் செய்த ஹூருன் மற்றும் எடெல்கிவ் நிறுவனம் வெளியிட்டது. அதன்படி சென்ற நூற்றாண்டில் மிக அதிகம் வழங்கிய கொடைவள்ளல்கள் 50 பேரில் குறிப்பிடத்தகுந்த இடத்தை டாடா வகிக்கிறார். டாடா நன்கொடையாக வழங்கிய தொகை 7.6 லட்சம் கோடி ரூபாயாகும். இவருக்கு அடுத்தபடியாகத் தான் பில் கேட்ஸ், வாரன் பபெட், ராக்பெல்லர் ஆகியோர் வருகின்றனர்.

விண்வெளிக்குச் சென்ற முதல் இந்திய வீராங்கனையான கல்பனா சாவ்லா விண்வெளிக்குச் செல்லும் போது தன்னுடன் டாடாவின் புகைப்படத்தையும் ஒரு புத்தகத்தையும் மட்டுமே கொண்டு சென்றிருந்தார். அந்த அளவு டாடாவிடமிருந்து தான் உத்வேகம் பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.

பல்லாயிரம் பேர்களை உத்வேகப்படுத்திய டாடா 1904-ம் வருடம் மே மாதம் 19-ம் நாளன்று ஜெர்மனிக்குச் சென்ற போது நோய்வாய்ப்பட்டு நௌகீம் என்ற இடத்தில் மறைந்தார். இங்கிலாந்தில் ஒர்கிங் என்ற இடத்தில் உள்ள பார்சியருக்கான ப்ரூக்வுட் இடுகாட்டில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

டாடா முக்கியமாக நான்கு லட்சியங்களைக் கொண்டிருந்தார்.

1) பிரம்மாண்டமான இரும்பு மற்றும் எக்கு தொழிற்சாலையை அமைப்பது

2)ஆகப் பெரும் கல்வி நிறுவனம் தொடங்குவது

3) மிகப் பிரமாதமான ஓட்டல் ஒன்றைத் தொடங்குவது

4) ஹைட்ரோ எலக்ட்ரிக் பிளாண்ட் ஒன்றை நிறுவுவது.

இவற்றில் தாஜ்மகால் ஹோட்டலை அவர் 1903-ல் ஆரம்பித்தார். இதர மூன்று கனவுகளையும் அவர் காட்டிய வழியில் அவரது குடும்பத்தினர் ஆரம்பித்து அவரது கனவை நனவாக்கினர்.

டாடா அயர்ன் அண்ட் ஸ்டீல் இண்டஸ்ட்ரி துவங்கப்பட்டது. இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் ஆரம்பிக்கப்பட்டது. டாடா பவர் கம்பெனி 8000 மெகாவாட் மின்உற்பத்தியை செய்ய ஆரம்பித்தது.

இளைஞர்களுக்கு அவர் தந்த செய்தி இது:

நேர்மையான, ஒளிவுமறைவற்ற வணிக கொள்கைகளுடன் சின்னச் சின்ன விஷயங்களின் மீதும் கூட தீவிரமான கவனத்தைக் கொண்டு, நமக்கு ஏற்ற சந்தர்ப்பங்களையும் சூழ்நிலைகளையும் சாதகமாக்கிக் கொண்டு உழைத்தால் வெற்றி நிச்சயம். இதை தனது வாழ்க்கையில் வாழ்ந்து காட்டி நிரூபித்த அவர் நமது இளைஞர்களுக்கான சரியான வழிகாட்டி அல்லவா!

தொடர்புக்கு:- snagarajans@yahoo.com

Tags:    

Similar News

பயமே ஜெயம்!