சிறப்புக் கட்டுரைகள்

இறை வழிபாடும் புலால் மறுப்பும்!

Published On 2024-10-05 10:44 GMT   |   Update On 2024-10-05 10:44 GMT
  • ஆயிரம் ஆடுகளை வெட்டி வேள்வி நிகழ்த்துவதை விட ஓர் உயிரைக் கொல்லாமல் இருப்பது நல்லது என்றார்.
  • கவிமணியின் கவிதையில் புத்தர் வாதிடும் பகுதி நெஞ்சை அள்ளுகிறது.

உயிர்க் கொலையைக் கண்டித்தவர் புத்தர். யாகங்களில் உயிர்கள் பலியிடப்படுவது அவருக்கு உடன்பாடல்ல.

புத்தர் வாழ்வில் வரும் ஒரு நிகழ்ச்சி புலால் மறுப்பை ஆதாரமாகக் கொண்டது.

ஆசிய ஜோதி என்ற தலைப்பில் புத்தரின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய கவிமணியின் கவிதையில் அழகாக அந்நிகழ்ச்சி விவரிக்கப்பட்டுள்ளது.

கானகத்தில் புத்தர் நடந்துசெல்லும்போது ஏராளமான ஆடுகளை ஓர் இடையன் மேய்த்துச் செல்வதைப் பார்த்தார். மன்னன் பிம்பிசாரன் நிகழ்த்தும் வேள்வியில் பலியிடுவதற்காக அவை அழைத்துச் செல்லப்படுகின்றன என்பதை அறிந்து கொண்டார்.


அந்த ஆட்டு மந்தையில் ஒரு சின்ன ஆடு கால் ஊனமானதால் தடுமாறியவாறே நடந்துகொண்டிருந்தது.

மல்லிகைப் பூ மாலை போல் இருந்த அந்த வெள்ளை ஆட்டுக்குட்டியைப் பரிவோடு தன் ரோஜாப்பூப் போன்ற கரங்களில் தூக்கிக் கொண்டார் புத்தர். ஆடுகளோடு அவரும் பிம்பிசாரன் அரண்மனை நோக்கி நடந்தார்.

உயிர்க் கொலை மாபெரும் பாவம் என்பதை அரசனுக்கு அறிவுறுத்தினார். ஆயிரம் ஆடுகளை வெட்டி வேள்வி நிகழ்த்துவதை விட ஓர் உயிரைக் கொல்லாமல் இருப்பது நல்லது என்றார்.

`அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத்து உண்ணாமை நன்று` என்கிறாரே வள்ளுவர்? அதே கருத்துத் தான் புத்தருக்கும் இருந்திருக்கிறது.

புத்தர் தன் கருத்தை நிறுவுவதற்கு மறுக்கவே முடியாக ஒரு மிகச்சிறந்த வாதத்தை முன்வைத்தார். அந்த வாதத்தைக் கேட்டு மன்னன் திடுக்கிட்டான்.

திருப்பூர் கிருஷ்ணன்

`நீ இறைவனுக்கு ஆடுகளைப் பலியிடுவதாகச் சொல்கிறாயே? இறைவன் இந்த மாமிசத்தை உண்பானா? சற்றே யோசித்துப் பார்.

மன்னனே! மனிதர்களும் ஆடுகளும் இறைவனின் குழந்தைகள். ஒரே ஒரு வித்தியாசம் தான். மனிதர்கள் வாயுள்ள பிள்ளைகள். ஆடுகள் வாயில்லாப் பிள்ளைகள்.

வாயுள்ள பிள்ளை வாயில்லாப் பிள்ளையை அரிந்து கறிசமைத்தால் அதைக் கருணை நிறைந்த தந்தை உண்டு களிப்பாரா?` என்று கேட்டார் புத்தர்.

இந்த வாதத்தைக் கேட்டுப் பதைபதைத்துப் போனான் பிம்பிசாரன். உடனே உயிர்ப்பலியைத் தடுத்து நிறுத்தினான். அது மட்டுமல்ல, தன் நாட்டு மக்கள் புலால் உண்ணலாகாது என்றும் சட்டமியற்றினான்.

கவிமணியின் கவிதையில் புத்தர் வாதிடும் பகுதி நெஞ்சை அள்ளுகிறது. அந்தப் பகுதி இதோ:

`ஆட்டின் கழுத்தை அறுத்துப் பொசுக்கி நீர்

ஆக்கிய யாகத்து அவியுணவை

ஈட்டும் கருணை இறையவர் கைகளில்

ஏந்திப் புசிப்பரோ கூறுமையா!

மைந்தருள் ஊமை மகனை ஒருமகன்

வாளால் அரிந்து கறிசமைத்தால்

தந்தையும் உண்டு களிப்பதுண்டோ இதைச்

சற்று நீர் யோசித்துப் பாருமய்யா!`

இந்தப் பொருள்பொதிந்த வாதத்திற்கு பதில் ஏது? பிம்பிசாரன் மனம் மாறியதில் வியப்பென்ன இருக்கிறது?


புதுச்சேரி ஸ்ரீஅன்னை இதைப் போலவே சிந்தித்தவர். எல்லா ஜடப் பொருட்களுக்கும் கூட உயிர் உண்டு, ஜடப் பொருளைக் கூடத் துன்புறுத்தக் கூடாது என்ற கொள்கையுடையவர் அவர்.

ஜடப் பொருள்கள் கூட அணுக்களால் ஆனவை தானே? அணுக்களில் புரோட்டான், நியூட்ரான் போன்றவை எல்லாம் ஓயாமல் சுற்றியவாறு இயங்கிக் கொண்டே தானே இருக்கின்றன? அப்படித்தானே விஞ்ஞானம் சொல்கிறது?

இயக்கம் உள்ளதெல்லாம் உயிர் உள்ளது தானே? மேசை, நாற்காலி போன்ற ஜடப்பொருள்கள் உயிரில்லாதவை போல் வெளிப் பார்வைக்குத் தோன்றினாலும் அடிப்படையில் அவற்றில் உள்ள அணுக்கள் இயங்கிக் கொண்டே இருப்பதால் அவற்றையும் உயிர் உள்ளவையாகத்தான் கொள்ள வேண்டும் என்பது அன்னையின் வாதம்.

அன்னையை ஓர் அலுவலகத்திற்கு விஜயம் செய்யும்படிக் கேட்டுக் கொண்டார்கள். அவர் உடனே அங்கு வர ஒப்புக் கொண்டார். அலுவலகத்தினர் அவசர அவசரமாக அலுவலகத்தை ஒழுங்கு செய்தார்கள். அன்னை வருகை தந்ததும் அன்னையைப் பூரண கும்பம் கொடுத்து உள்ளே அழைத்துச் சென்றார்கள்.

உள்ளே சென்ற அன்னை சற்று நின்றார். எங்கிருந்தோ சன்னமான ஓர் அழுகுரல் தனக்குக் கேட்பதாகச் சொன்னார். பின் அந்த அழுகுரல் எங்கிருந்து வருகிறது என மெல்ல உட்புறம் நடந்து சென்று ஆராய்ந்தார்.

ஒரு பூட்டிய அலமாரியில் இருந்துதான் அழுகைக் குரல் கேட்டது என்றார் அன்னை. அந்த அலமாரியைத் திறக்கச் செய்தார்.

அடுத்த கணம் அன்னை வருகிறார் என அவசர அவசரமாக அலமாரியின் உள்ளே அள்ளித் திணித்திருந்த கோப்புகள் (பைல்கள்) எல்லாம் தடதடவெனக் கீழே விழுந்தன. தான் கேட்டது அந்தக் கோப்புகளின் அழுகுரல்தான் என்றார் அன்னை. கோப்புகளை ஒழுங்காக அடுக்கி வைக்கச் சொன்னார். இப்போது அவற்றின் அழுகை நின்றுவிட்டது எனவும் தெரிவித்தார்.

ஜடப் பொருள்கள் என்று நாம் கருதுகின்றவற்றைக் கூட நாம் சீராகப் பராமரித்தால் அவை மகிழ்ச்சி அடையும் என்றும் அவை நமக்குக் கூடுதலாகப் பணிபுரியும் என்றும் அன்னை கருதுகிறார். பழைய செருப்பைத் தூக்கி எறியும்போது வெறுமே தூக்கி எறியக் கூடாது. அதை ஒரு காகிதத்தில் சுற்றி `நீ இத்தனை காலம் எனக்குப் பாதசேவை செய்தாய், உனக்கு மனமார்ந்த நன்றி' என்று எண்ணியவாறு குப்பைத் தொட்டியில் போடவேண்டும் என்கிறார் அன்னை.

அப்படியானால் வரும் புதுச்செருப்பு கூடுதலான நாட்கள் பணிபுரியும் என்பது அன்னையின் கருத்து.

ஜடப் பொருள்களையே கனிவோடு கையாள வேண்டும் என்றால் புலால் உணவைத் தவிர்க்க வேண்டும் என்பது தானே தெளிவாகிறதல்லவா?

`தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்று விஞ்ஞானி ஜகதீஷ் சந்திரபோஸ் கண்டுபிடித்திருக்கிறார், அப்படியானால் தாவரங்களையும் சாப்பிடக் கூடாதுதானே?` என்று வாரியாரிடம் விதண்டாவாதமாகக் கேள்வி எழுப்பினார் ஓர் இளைஞர்.

வாரியார் நகைத்தவாறே அந்தக் கேள்விக்கு பதில் சொன்னார்:

`அவரைக்காயைப் பறித்தாலோ கீரையைக் கிள்ளினாலோ அந்தச் செடி மறுபடி வளர்கிறது, ஆனால் ஆட்டின் கழுத்தை வெட்டினாலோ கோழியின் கழுத்தைத் திருகினாலோ ஆட்டின் தலையும் கோழியின் தலையும் திரும்ப முளைத்து வளர்வதில்லை அப்பனே! அதுதான் வித்தியாசம்!`

தாவரங்களை மட்டுமல்லாது களிமண்ணையும் நேசித்தது பாரசீகக் கவிஞன் உமர்கயாமின் கவிதை உள்ளம். உமர்கயாம் கவிதைகளைத் தமிழாக்கிய கவிமணியின் பாடல் ஒன்று, உமர்கயாமின் களிமண் நேசத்தைப் பற்றிப் பேசுகிறது.

ஒரு குயவன் களிமண்ணால் பானை வனைந்து கொண்டிருந்தான். அவன் அருகே நின்று அந்தச் செயலைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் உமர்கயாம். அந்தக் களிமண்ணின் குரலைக் கேட்கிறது கவிஞரின் கருணையுள்ளம்.

அந்தக் களிமண் ஏதோ பேசுகிறதே? அது என்ன சொல்கிறது? கூர்ந்து கவனிக்கிறார் கவிஞர். அவர் கண்களில் கண்ணீர் தளும்புகிறது. கவிதை இதோ:

`மண்ணை எடுத்து ஒரு குயவன்

மயக்கிப் பிசையும் வேளையிலே

திண்ணை அருகே சென்றிருந்தேன்!

செய்யும் செயலும் கண்டிருந்தேன்!

`அண்ணா! மெல்ல மெல்ல` என

அமைந்த அழுகைக் குரல் கேட்டேன்!

கண்ணில் காணாத் தன் நாவால்

களிமண் கரைவது என உணர்ந்தேன்!`

என்ற வரிகளைப் படிக்கும்போது களிமண்ணுக்காக உமர்கயாம் கண்கள் மட்டுமல்ல, நம் கண்களும் கூடக் கசியத்தான் செய்கின்றன.

புலால் மறுப்பை நீதி நூல்கள் தொடர்ந்து வலியுறுத்தியதால் தெய்வச் செயல்களில் புலால் படைப்பது மெல்லக் குறையத் தொடங்கியது. புனித நாட்களான வெள்ளிக்கிழமை மற்றும் விரத தினம் போன்றவற்றில் பலர் புலால் உண்பதில்லை.

உயிர்களைத் தெய்வத்திற்குப் பலியிடும் வழக்கத்திற்கு பதிலாக வேறு வழக்கம் தோற்றுவிக்கப்பட்டது.

மாமிசம்போல் தோற்றமளிப்பது சதைப்பற்று நிறைந்த பூசணிக்காயின் உள்பகுதி. அதை வெட்டி அதில் குங்குமம் தடவி, குங்குமத்தைக் குருதிபோல் பாவித்து பூசணிக்காயை விலங்குகளுக்குப் பதிலாக வெட்டத் தொடங்கினார்கள்.

அமாவாசை தோறும் பல கடைகளின் முன்னால் பூசணிக்காய், திருஷ்டி தோஷம் நீங்குவதற்காக என்று வெட்டிப் போடப் பட்டிருப்பதைப் பார்க்கிறோம். நடுத்தெருவில் அவை கிடக்கும்போது இருசக்கர வாகனங்கள் அதில் வழுக்கி விபத்துக்குள்ளாவதையும் காண்கிறோம்.


`பூசணிக்காய் உடைத்துப் போடப்படுவதால் இருசக்கர வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகின்றனவே? பூசணிக்காய் உடைக்கும் இந்த இந்துமத மூட நம்பிக்கை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?` என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிடம் ஒரு தொலைக்காட்சியில் வினா எழுப்பப்பட்டது. மெல்லிய முறுவலுடன் அமைதியாக பதில் சொன்னார் அப்துல்கலாம்:

`அதை நம்பிக்கை என்று சொல்லுங்கள். மூட நம்பிக்கை என்று நாம் எப்படிச் சொல்ல முடியும்? ஏனென்றால் இதுபோன்ற நம்பிக்கைகள் இந்து மதத்தில் மட்டுமல்ல, எல்லா மதங்களிலும் இருக்கின்றன. எண்ணற்ற மக்களின் நம்பிக்கைகளைத் தேவையில்லாமல் விமர்சனத்திற்கு உட்படுத்துவது சரியல்ல.

ஆனால் இருசக்கர வாகனங்கள் விபத்துக்குள்ளாவதை நாம் தடுக்க வேண்டியது மிக அவசியம். எனவே பலியிடப்பட்ட பூசணிக்காய்களை பின்னர் ஞாபகமாக தெருவோரத்தில் உள்ள குப்பைத் தொட்டியில் எடுத்துப் போட்டுவிடுமாறு நாம் அறிவுறுத்தலாம்!`

அப்துல் கலாமின் எந்த மதத்தினரையும் புண்படுத்தாத இந்த பக்குவமான இந்த பதிலைக் கேட்டு நேயர்கள் பெரிதும் மகிழ்ந்தார்கள்.

திருக்குறளின் இருபத்தாறாம் அதிகாரம் `புலால் மறுத்தல்` என்ற தலைப்பிலேயே அமைந்துள்ளது. மொத்தம் பத்துக் குறட்பாக்களில் மாமிச உணவு வேண்டாம் வேண்டாம் என்று பத்து முறை அறைகூவுகிறார் வள்ளுவர்.

வள்ளுவரின் புலால் மறுப்புக் கொள்கை இப்போது உலகெங்கும் வலுப்பெற்று வருகிறது. வள்ளுவரது கோட்பாட்டின் வெற்றி என்பது தமிழர்களின் வெற்றி அல்லவா? எனவே அதுகுறித்து நாம் மகிழலாம்.

தொடர்புக்கு-thiruppurkrishnan@gmail.com

Tags:    

Similar News