சிறப்புக் கட்டுரைகள்

மனதை கவனிப்போம்!

Published On 2024-11-02 17:45 GMT   |   Update On 2024-11-02 17:45 GMT
  • மனம் நினைத்தால் தான் உடல் செயல்களைச் செய்கிறது.
  • நம் மனம் ஐம்புலன்களுடன் நெருங்கிய தொடர்புடையது.

மனம் ஒரு குரங்கு என்று கூறுகிறோம். சிந்தித்துப் பார்த்தால் இச்சொல்லில் உள்ள உண்மை புரியும். உடலால் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் செல்லச் சில வரையறை உண்டு. ஆனால் மனதிற்கோ எல்லைகள் இல்லை.

நினைத்தவினாடியே, எட்டுத்திக்கில் எங்கு வேண்டுமானாலும் செல்லும், வானில் பறக்கும், கடல்கடந்து பல தேசங்கள் செல்லும். இருப்பது திருச்சியாக இருந்தாலும் அமெரிக்காவில் இருக்கும் ஒருவரை நினைக்கும்.

நடக்காத ஒன்றை நடந்ததுபோல் கற்பனை செய்யும், நடந்த ஒன்றை மீண்டும் மீண்டும் நினைத்துக்கொண்டே இருக்கும். மனம் நினைத்தால் அனைத்தையும் நடத்திக் காண்பிக்கும்.

இப்படி அளப்பரிய ஆற்றல் கொண்டது நம் மனம். ஆனால் நாமோ மனத்தை நெறிப்படுத்தத் தவறி, வாழ்வியல் முறை மாற்றங்களால் ஏற்படும் நோய்களில் சிக்கித்தவிக்கின்றோம்.

மனம் நினைத்தால் தான் உடல் செயல்களைச் செய்கிறது.

மரு.அ.வேணி

மனம் நம் ஐம்புலன்களுடனும் மற்றும் நாம் பேசும் சொற்களுடனும் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது. ஒருவர் பேசும் சொல்லில் இருந்துதான் அவரின் வாழ்க்கை உறுதிசெய்யப்படுகிறது என்று கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா? சொற்களின் வலிமைதான் ஒருவரை வெற்றிபெறச் செய்வதா? தோல்வியுறச் செய்வதா? என்பதை உறுதி செய்கிறது.

ஒரு செயலைச் செய்ய நிறையப் பேர் ஆசைப்பட்டாலும், யார் செய்து முடிக்கிறார்கள் என்பதுதான் வரலாற்றில் இடம்பெறும்.

எண்ணம், சொல், செயல் இவை மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் இருக்கும்போது, நாம் மன அமைதியுடனும், மனமகிழ்ச்சியுடனும் இருப்போம்.

ஆனால் சிலர் நிறையச் சிந்தித்தாலும், அதைச் செயல்வடிவத்திற்குக் கொண்டுவராமல் கற்பனையில் வாழ்வார்கள். இவர்கள் தம் வாழ்வில் நிறைய ஏமாற்றங்களை எதிர்கொள்வார்கள்.

மனத்தின் ஆசைகள் சரிதானா? என ஆராய்ந்து முடிவெடுக்காமல் விட்டுவிடும்போது, மனிதன் பல இன்னல்களுக்கு உள்ளாகிறான்.

ஆறு விதமான விலங்குகளை எடுத்துக்கொள்வோம். பாம்பு, முதலை, பறவை, குரங்கு, நரி, நாய் ஆகியவை அனைத்தும் ஒரே கயிற்றில் கட்டப்பட்டுள்ளன என்று வைத்துக்கொள்ளுங்கள், அவை என்ன செய்யும்?


பாம்பு நிலத்தில் ஊர்ந்து செல்லப் பார்க்கும், முதலை நீரினுள் செல்ல முயலும், பறவை பறந்து சென்றுவிட எண்ணம் கொள்ளும், குரங்கு தாவி மரத்தில் ஏற நினைக்கும், நரி காட்டுக்குள் செல்ல அனைத்தையும் இழுக்கும், நாய் ஊருக்குள் செல்லத் துடிக்கும். இதில் யார் வெற்றி பெறுவார்கள்? தன் எண்ணத்தை ஈடேற்ற வலிமை கொண்ட விலங்கு, மற்ற அனைத்து விலங்குகளையும் இழுத்துக் கொண்டு தன் இருப்பிடம் தேடிச் செல்ல முயலும்.

இந்த ஆறு விலங்குகளின் திறமையும் தனித்துவம் வாய்ந்தவை. இந்த ஆறு விலங்குகளும் நம்முள்ளும் இருக்கின்றன. சில நேரங்களில் பாம்புபோல் சீறுகிறோம், முதலை போல், இருக்கும் இடத்திற்கு ஏற்றவாறு நடந்துகொள்கிறோம், மகிழ்ச்சியாக இருக்கும் தருணங்களில் பறவையைப் போல் வானில் பறப்பதுபோன்று கற்பனை செய்கிறோம்,

நம் மனம் குரங்குபோல் அங்குமிங்கும் அலைந்து திரிகிறது, சில நேரங்களில் நரிபோல் தந்திரமாகச் செயல்படுகிறோம், கோபமாக இருக்கும்போது நாய்க் குணம் வெளிவருகிறது. இப்படிப் பலவிதமான குணங்களோடு நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

நாம் ஐம்புலன்களின் (கண், மூக்கு, காது, வாய், மெய்) விருப்பத்தை நிறைவேற்றிக்கொண்டே இருக்கிறோம். அதற்காகத்தான் வாழ்கிறோம் என்ற எண்ணம் இன்றைய சமுதாயத்தில் வேரூன்றி உள்ளது. மேற்கூறிய ஆறு விலங்குகளில் ஐந்தை நம் ஐம்புலன்களோடு ஒப்பிடலாம்.

குரங்கை நம் மனத்தோடு ஒப்பிடலாம். நம் மனம் ஐம்புலன்களுடன் நெருங்கிய தொடர்புடையது. கண்கள் எதைப் பார்க்க வேண்டும், சுற்றிப் பலபேர் பேசினாலும், யார் பேசுவதைக் கேட்க வேண்டும், பல வகையான உணவுகள் இருக்கும்போது, எதை நாம் சாப்பிட வேண்டும் என்பதை முடிவு செய்வது நம் மனம் தானே,

மனம் என்பது எண்ணங்களின் கோர்வை என்பதை முந்தைய பகுதிகளில் பார்த்தோம். அப்படி என்றால் எண்ணங்கள் உருவாவதற்கான விதை எது? ஐம்புலன்கள் மூலம் நாம் உள்வாங்குகின்றவை தாமே!

நீங்கள் நாளும் எதிர்மறை எண்ணங்களைத் தூண்டுகின்ற நாடகங்களைப் பார்க்கிறீர்கள் என்றால், உங்கள் வாழ்க்கையில் அது நடந்துவிடுமோ என்ற பயம் எழுகிறது. படிக்கும் செய்திகள் நம்முள் சில தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. நம்முள் தோன்றுகின்ற எண்ணங்கள் சில உணர்வு நிலைகளை ஏற்படுத்துகின்றன, அதற்கேற்றாற்போல் நாம் செயல்களைச் செய்கிறோம். நம் செயல்களுக்கான விதையை எண்ணங்கள்தாம் தருகின்றன. இந்த எண்ணங்கள் யாருடைய கட்டுபாட்டில் உள்ளன? சற்றே சிந்தித்துப் பாருங்கள்.

சில நேரங்களில் நாம் செய்கின்ற செயல்களினால் ஏற்படும் பின்விளைவு பற்றிச் சிந்திக்காமல் இருந்துவிடுகிறோம். அதனால் நம் வாழ்க்கை சிக்கல்களில் மாட்டிக் கொண்டுவிடுகிறது. எனவே மனம் செம்மையுற, நாம் என்ன செய்ய வேண்டும்? என்பது பற்றிப் பார்ப்போம்.

1.மனித வாழ்க்கை என்பது மூச்சுக் காற்று மற்றும் எண்ணங்களினால் தான் இயக்கப்படுகிறது என்பதை முதலில் உணர வேண்டும்.

2.அமைதியாக அமர்ந்து மூச்சுக்காற்று உள்செல்வதையும், வெளிவருவதையும் நாளும் ஐந்து நிமிடங்களாவது கவனிக்க வேண்டும். மூச்சுக்காற்றின் பின் நம் கவனம் செல்லும்போது நம் மனம் கட்டுப்பாட்டிற்குள் வரும்.

3.ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, நாம் எண்ணங்களைக் கவனிக்கத் தொடங்க வேண்டும். எந்த விதமான எண்ணங்களாக இருந்தாலும் சரி, அதற்கு விடையளிக்காமல் அவற்றைக் கவனிக்க மட்டுமே செய்ய வேண்டும்.

4.மன அழுத்தத்தாலோ அல்லது மனஅச்சத்தாலோ பாதிக்கப்பட்டவர்கள், ஐந்து மணி நேரத்துக்கு ஒருமுறை அமைதியாக அமர்ந்து மூன்று நிமிடங்களுக்கு மூச்சை மட்டும் கவனிக்க வேண்டும்.

5.ஒரு நாளைக்கு ஒரு முறையாவது நம் உணர்வுகளின் வெளிப்பாடு எப்படி இருந்தது என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

6.நான் மனஅமைதியுடனும், மனமகிழ்ச்சியுடனும் இருக்கிறேன் என்று இரவு உறங்குவதற்கு முன்னும், காலை எழுந்தவுடனும் குறைந்தது மூன்று முறையாவது உங்களுக்குள் சொல்லிக்கொள்ள வேண்டும்.

7.பேசும் சொற்களில் நேர்மறையான சொற்களைப் பயன்படுத்திப் பேச முயல வேண்டும்.

8.எதிர்மறை எண்ணங்களை அதிகப்படுத்துபவராக இருந்தாலும் சரி, நாடகங்களாக இருந்தாலும் சரி அதைத் தவிர்த்துவிடுங்கள்.

9.அன்றன்று சமைத்த இயற்கை உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்ளுங்கள்.

10.நாளும் ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சி செய்யுங்கள்.

மேற்கூறிய 10 வழிமுறைகளும் மனத்தைச் செம்மையுறச் செய்வதற்கான வழிமுறைகள் என்பதை மனத்தில் பதியவைத்து நம்பிக்கையுடன் செய்ய முயலுங்கள்.

எது செய்யத் தொடங்கினாலும் நம்பிக்கையின்மை தலைதூக்க முயலும். உடனே அதன் தலையில் தட்டிவிட்டு, "நான் வாழ்கின்ற வாழ்க்கை எனக்கானது, அதை நான் மட்டுமே வாழ முடியும், அதை நேர்மறை எண்ணங்களுடன் மகிழ்ச்சியாகவும், மனஅமைதியுடனும் வாழப்போகிறேன்" என்று கூறுங்கள்.

நாட்கள் செல்லச் செல்ல அவநம்பிக்கை குறைந்து, மனத்தெம்பு அதிகரித்து, உங்கள் மனம் செம்மையுறுவதை உணர்வீர்கள்.

உடலுக்காகத் தினமும் குளிப்பது, தூய்மையான ஆடைகளை அணிவது, நல்ல உணவுகளை உண்பது என்று நாளும் செய்கிறோம். ஆனால் மனதை அதன் போக்கில் விட்டுவிடுகிறோம். இனி இந்தத் தவறைச் செய்யாமல் மனதிற்காக 15 நிமிடங்களாவது ஒதுக்குவோமா?

போன்: 75980-01010, 80564-01010.

Tags:    

Similar News