சேப்பாக்கம் ஆடுகளம் குறித்து டோனி மீண்டும் அதிருப்தி
சென்னை:
ஐ.பி.எல். போட்டியில் சென்னை அணி கொல்கத்தாவை வீழ்த்தி மீண்டும் முதல் இடத்தை பிடித்தது.
சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 108 ரன்னே எடுக்க முடிந்தது.
பந்து வீச்சுக்கு ஏற்ற இந்த மோசமான ஆடு களத்தில் ஆந்த்ரே ரஸ்சல் மட்டுமே தாக்கு பிடித்து ஆடினார். அவர் 44 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் 50 ரன்கள் எடுத்தார். தீபக் சாஹர் 3 விக்கெட்டும், ஹர்பஜன்சிங், இம்ரான் தாகீர் தலா 2 விக்கெட்டும், ஜடேஜா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 16 பந்துகள் எஞ்சி இருந்த நிலையில் 109 ரன் இலக்கை எடுத்தது. 17.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 111 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டு பிளிஸ்சிஸ் 43 ரன்னும், அம்பதிராயுடு 21 ரன்னும் எடுத்தனர். சுனில் நரீன் 2 விக்கெட் வீழ்த்தினார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் பெற்ற 5-வது வெற்றியாகும். இதன் மூலம் புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதல் இடத்தை பிடித்தது.
மிகவும் குறைந்த ரன்னே எடுக்க முடிந்ததால் சேப்பாக்கம் ஆடுகளம் குறித்து மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது. ஐ.பி.எல். தொடக்க ஆட்டத்தில் பெங்களூர் அணியால் 70 ரன்னே எடுக்க முடிந்தது. இந்த ரன்னை எடுக்க சூப்பர் கிங்சுக்கு 18 ஓவர் வரை தேவைப்பட்டது. நேற்றைய போட்டியிலும் இதே நிலைமைதான்
சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி, சேப்பாக்கம் ‘பிட்ச்’ குறித்து மீண்டும் அதிருப்தி அடைந்துள்ளார். போட்டி முடிந்த பிறகு அவர் இது தொடர்பாக கூறியதாவது:-
முதல் போட்டியில் இருந்த ஆடுகளம் போலவே இந்த ஆட்டத்திலும் இருந்தது. பிட்ச் குறித்து புகார் கூறிக் கொண்டே நாங்கள் வெற்றி பெற்று விடுகிறோம். இது போன்ற பிட்சில் விளையாட நாங்கள் விரும்பிவில்லை. ஏனென்றால் மிகவும் குறைந்த ஸ்கோர் தான் எடுக்க முடிகிறது.
எங்கள் பேட்ஸ்மேன்களுக்கு இந்த ஆடுகளத்தில் ரன் எடுப்பது கடினமாக இருக்கிறது. அதுவும் முதலில் பேட்டி செய்தால் மிகவும் கடினமாக உள்ளது. பனி பொழிவினால் 2-வது பகுதி ஆட்டத்துக்கு ஆடுகளம் கொஞ்சம் பரவாயில்லை. இது மாதிரியான ஆடுகளம் இல்லாமல் பேட்டிங்குக்கு சாதகமாக அமைந்தால் நாங்கள் சரியான அணி சேர்க்கையை சேர்த்தாக வேண்டும். என்னை பொறுத்தவரை திட்டமிடுதல் எதுவுமில்லை.
பிராவோ காயம் அடைந்த பிறகே அணி சேர்க்கை எங்களுக்கு கடினமாக உள்ளது. ஆல்ரவுண்டர் இல்லை. டேவிட் வில்லேயும் இல்லை
ஹர்பஜன்சிங், இம்ரான் தாகீர் ஆகியோரை பற்றி எந்த பிரச்சினையும் இல்லை. இருவரும் முதிர்ச்சி அடைந்தவர்கள். பழைய ஒயின் போன்றவர்கள். இருவரும் மிகவும் சிறப்பாக பந்து வீசி வருகிறார்கள். நான் என்ன விரும்புகிறேனோ அதற்கு ஏற்றவாறு நல்ல திறமையுடன் இம்ரான்தாகீர் வீசுகிறார். ஒட்டு மொத்தத்தில் பந்து வீச்சு துறை நன்றாக இருக்கிறது.
இவ்வாறு டோனி கூறியுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7-வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்சை நாளை மீண்டும் சந்திக்கிறது. இந்த ஆட்டம் ஜெய்பூரில் இரவு 8 மணிக்கு நடக்கிறது.
கொல்கத்தா நைட்ரை டர்ஸ் அணி 2-வது தோல்வியை தழுவியது. அந்த அணி அடுத்த ஆட்டத்தில் டெல்லியை வருகிற 12-ந்தேதி எதிர்கொள்கிறது. #IPL2019 #CSKvKKR #dhoni