விளையாட்டு

பாகிஸ்தான் அணி கேப்டனாக ரிஸ்வான் தேர்வு செய்யப்படுவார்- முடாசர் நாசர்

Published On 2024-10-06 05:57 GMT   |   Update On 2024-10-06 05:57 GMT
  • புதிய கேப்டனாக யார் நியமிக்கப்படுவார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
  • ஒருங்கிணைந்த பாகிஸ்தான் அணியை உருவாக்க வேண்டிய சிக்கலில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உள்ளது.

கராச்சி:

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து (ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர்) பாபர் ஆசம் கடந்த சில நாட்களுக்கு முன்பு விலகினார்.

ஏற்கனவே டெஸ்ட் கேப்டனாக பாபர் ஆசமுக்கு அடுத்தப் படியாக பொறுப்பை ஏற்ற ஷான் மசூத்தால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. 5 டெஸ்டில் அவரது தலைமையிலான அணி தோல்வியை தழுவியது.

பாகிஸ்தான் அணியின் ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் அணிக்கு புதிய கேப்டனாக யார் நியமிக்கப்படுவார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் முகமது ரிஸ்வான் பாகிஸ்தான் அணியின் புதிய கேப்டனாக தேர்வு செய்யப்படுவார் என்றும், அவர் மட்டுமே அதற்கான வாய்ப்பில் உள்ளார் என்றும் பாகிஸ்தான் முன்னாள் தொடக்க வீரர் முடாசர் நாசர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ரிஸ்வானை தவிர அனைவரையும் முயற்சி செய்து விட்டது. இதனால் அவரைதான் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கேப்டனாக்க முடியும். ஆனால் பாகிஸ்தான் அணி வீரர்களுக்கும், மேல்மட்ட நிர்வாகத்தினருக்கும் ரிஸ்வான் மீது திருப்தி இல்லை. ஆனாலும் அவரை விட்டால் வேறு நபர் இல்லை. ரிஸ்வானை தேர்வு செய்யவே தேர்வுக் குழுவினர் கட்டாயப்படுத்தப்படுவர்.

இன்னொரு இளம் வீரரைத் தேர்வு செய்தால் பாபர் ஆசமுக்கு ஏற்பட்டது போல் தான் இருக்கும். எனவே மூத்த வீரர் ஒருவரை கேப்டனாக்கி அவர் தலைமையில் இளம் வீரர் ஒருவரை கேப்டன் பதவிக்கு தயார்படுத்த வேண்டும். என்னைப் பொறுத்தவரை 3 வடிவங்களுக்குமே ரிஸ்வானைக் கேப்டனாக்கினால் நல்லது என்றுதான் நினைக்கிறேன்.

கேப்டன் பதவியில் ஏற்பட்ட மாற்றங்கள் பாகிஸ்தான் அணியின் சமீபத்திய தோல்விகளில் பிரதி பலித்தது. இளம் வீரர்கள் கேப்டனாக்கப்பட்டு பிறகு நீக்கப்படுகின்றனர். இதனால் அணியில் பிளவுகள் ஏற்படுகின்றன.

இவ்வாறு முடாசர் நாசர் கூறியுள்ளார்.

பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி நடைபெறுவதால் அதற்குள் ஒரு நல்ல ஆக்ரோஷமான, கேப்டனை நியமிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. ஒருங்கிணைந்த பாகிஸ்தான் அணியை உருவாக்க வேண்டிய சிக்கலில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உள்ளது.

Tags:    

Similar News