சொந்த நாடே உதறித்தள்ளியது... இப்போது அவர் உலகையே ஆளப்போகிறார் - பஜ்ரங் புனியா
- 4 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற வீராங்கனையை வீழ்த்தியுள்ளார்.
- இப்போது உலகையே ஆளப்போகிறார். ஆனால், சொந்த நாட்டின் கட்டமைப்பிடம் தோற்றுவிட்டார்.
பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மல்யுத்தத்தில் பெண்கள் ப்ரீஸ்டைல் 50 கிலோ எடைப்பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் வினேஷ் போகத் மற்றும் உக்ரைன் வீராங்கனை ஒக்ஸானா லிவாச் ஆகியோர் மோதின.
இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய போகத் 4-0 என முன்னிலை வகித்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய வினேஷ் போகத் 7-5 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார். அரையிறுதி போட்டி இன்று இரவு 10.25 மணிக்கு நடைபெறும்
இந்நிலையில், வினேஷ் போகத் வெற்றி தொடர்பாக இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "பாரிஸ் ஒலிம்பிக்கில் இன்று அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி வாகை சூடி பெண் சிங்கமாக திகழ்கிறார் வினேஷ் போகத். அவர் 4 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற வீராங்கனையை வீழ்த்தியுள்ளார். காலிறுதியில் முன்னாள் உலக சாம்பியனை வீழ்த்தியுள்ளார். ஆனால் இவரை சொந்த நாடே உதறித்தள்ளியது. தெருக்களில் தரத்தரவென இழுத்துச்சென்றது. இவர்தான் இப்போது உலகையே ஆளப்போகிறார். ஆனால், சொந்த நாட்டின் கட்டமைப்பிடம் தோற்றுவிட்டார்" என்று பதிவிட்டுள்ளார்.
பாஜக முன்னாள் எம்.பி. பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் நடத்தினர். அந்த போராட்டத்தில் வினேஷ் போகத் , பஜ்ரங் புனியா ஆகியோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.