விளையாட்டு
null

போட்டிக்கு சைக்கிளில் லேட்டா வந்த கார்ல்சன்.. காப்பாற்றிய போட்டோகிராபர் - செஸ் ஒலிம்பியாடில் சுவாரஸ்யம்

Published On 2024-09-14 10:17 GMT   |   Update On 2024-09-14 12:02 GMT
  • போட்டி வளாகத்துக்கு உள்ளே வரை வந்து சேர்ந்த கார்ல்சன் அங்கிருந்து ஆட்டக் களத்துக்கு செல்வது சாத்தியமானதாக இருக்கவில்லை.
  • ஆட்ட விதிகளின் படி போட்டி களத்துக்கு ஆட்டம் தொடங்க 15 நிமிடத்திற்குள் வர வேண்டும்

செஸ் விளையாட்டில் மிகப்பெரிய போட்டியான செஸ் ஒலிம்பியாட் 2 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. 44-வது செஸ் ஒலிம்பியாட் கடந்த 2022-ம் ஆண்டு சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் கடந்த செப்டம்பர் 10 தொடங்கி வரும் 23-ந்தேதி வரை நடக்கிறது. ஓபன் பிரிவில் 197 அணிகளும் 975 வீரர்களும், பெண்கள் பிரிவில் 183 அணிகளும் 909 வீராங்கனைகளும் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில் நார்வே நாட்டை சேர்ந்த உலகின் நம்பர் 1 செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் நேற்றைய தினம் [வெள்ளிக்கிழமை] கொலம்பிய நாடு வீரரை எதிர் கொள்ள இருந்தார். இந்த வருட ஒலிம்பியாடில் கார்ல்சனின் முதல் போட்டியான இதில் கலந்து கொள்ளாமலேயே அவர் தோற்கும் நிலைக்கு சென்ற சம்பவம் பலரை புருவம் உயர்த்த வைத்துள்ளது. அதாவது, நேற்றய போட்டிக்கு கார்ல்சன் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

அதிக டிராபிக் இருந்ததால் தான் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து போட்டி நடக்கும் இடத்துக்கு வர தாமதம் ஆகும் என்பதால் சைக்கிளில் வர கார்ல்சன் முடிவெடுத்துள்ளார். போட்டி தொடங்க சில நிமிடங்களே இருந்த நிலையில் போட்டி வளாகத்துக்கு உள்ளே வரை வந்து சேர்ந்த கார்ல்சன் அங்கிருந்து ஆட்டக் களத்துக்கு செல்வது சாத்தியமானதாக இருக்கவில்லை.

இதனால் எல்லாம் அவ்வளவுதான் என்று நினைத்துக்கொண்டிருந்த வேளையில் அங்கு படம் பிடித்துக்கொண்டிருந்த மரியா எமிலியானோவா என்ற புகைப்பட கலைஞர் கார்ல்சனுக்கு அந்த வளாகத்தில் இருந்து ஆட்டம் நடக்கும் களத்துக்கு செல்வதற்கான குறுக்கு வழியை காண்பித்து வழிகாட்டியுள்ளார்.

இதனால் களத்துக்கு  10 நிமிடம் மட்டுமே தாமதமாக களத்துக்கு சென்று சேர்ந்த கார்ல்சன் தகுதி நீக்கம் செய்யப்படுவதில் இருந்து நூலிழையில் தப்பியுள்ளார். ஆட்ட விதிகளின் படி போட்டி களத்துக்கு ஆட்டம் தொடங்க 15 நிமிடத்திற்குள் வர வேண்டும். இதற்கிடையே இந்த போட்டியில் கார்ல்சன் 40 நகர்வுகளுடன் கொலம்பிய வீரரை தோற்கடித்து வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News