செஸ் ஒலிம்பியாட்: முதல் சுற்றில் மொராக்கோவை வீழ்த்தியது இந்திய அணி
- இந்திய ஆண்கள் அணி முதல் ரவுண்டில் மொராக்கோவை எதிர்கொண்டது.
- முதல் ரவுண்டில் குகேசுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது.
புடாபெஸ்ட்:
45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நேற்று தொடங்கியது. இதில் ஓபன் பிரிவில் 197 அணிகளும், பெண்கள் பிரிவில் 184 அணிகளும் பங்கேற்றுள்ளன. மொத்தம் 11 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் முடிவில் அதிக புள்ளிகளை சேர்க்கும் அணி தங்கப்பதக்கத்தை கைப்பற்றும்.
போட்டித்தரநிலையில் 2-வது இடம் வகிக்கும் இந்திய ஆண்கள் அணி முதல் ரவுண்டில் மொராக்கோவை எதிர்கொண்டது. இந்திய வீரர்களில் தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா வெள்ளை நிற காய்களுடன் ஆடினார். அவர் 30-வது காய் நகர்த்தலில் மொராக் கோவின் டிசிர் முகமதுவை தோற்கடித்தார். அர்ஜூன் எரிகாசி, விதித் குஜராத்தி, ஹரிகிருஷ்ணா ஆகிய இந்தியர்களும் தங்களது ஆட்டங்களில் வெற்றி பெற்றனர். முதல் ரவுண்டில் குகேசுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது.
பெண்கள் பிரிவில் இந்தியா முதல் சுற்றில் ஜமைக்காவை சந்தித்தது. இதில் இந்தியாவின் வைஷாலி, ஜமைக்காவின் கிளார்க் அடானியையும், தானியா சச்தேவ், வாட்சன் கேப்ரியாலையும் சாய்த்தனர்.