விளையாட்டு

கோபா அமெரிக்க கோப்பை கால்பந்து: பிரேசில் அதிர்ச்சி தோல்வி

Published On 2024-07-07 05:42 GMT   |   Update On 2024-07-07 05:42 GMT
  • இன்று அதிகாலை 5.30 மணிக்கு நடைபெற்ற கடைசி கால் இறுதி போட்டியில் பிரேசில்-உருகுவே அணிகள் மோதின.
  • உருகுவேயிடம் பெனால்டி ஷூட்டில் தோற்று வெளியேறியது.

லாஸ் வேகாஸ்:

கோபா அமெரிக்க கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.

இன்று அதிகாலை நடந்த கால் இறுதி ஆட்டம் ஒன்றில் கொலம்பியா -பனாமா அணிகள் மோதின.

இதில் கொலம்பியா 5-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றது.ஜான் கோர்டோபா ( 8-வது நிமிடம்), ரோட்ரிக்ஸ் (15-வது நிமிடம். பெனால்டி) , லூயிஸ் டியாஸ் (41-வது நிமிடம்) , ரிச்சர்ட் ரியோஸ் ( 70-வது நிமிடம்) , போர்ஜா (94-வது நிமிடம். பெனால்டி) கோல் அடித்தனர்.

இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5.30 மணிக்கு நடைபெற்ற கடைசி கால் இறுதி போட்டியில் பிரேசில்-உருகுவே அணிகள் மோதின.

முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க கிடைத்த வாய்ப்பை தவறவிட்டனர். 74-வது நிமிடத்தில் உருகுவே வீரர் நான்டஸ் முரட்டு ஆட்டத்துக்காக 2-வது முறையாக மஞ்சள் அட்டை பெற்றார். இதனால் சிவப்பு அட்டையுடன் அவர் வெளியேற்றப்பட்டார். இதன் காரணமாக 10 வீரர்களுடன் ஆடும் நிலை உருகுவேக்கு ஏற்பட்டது.

ஆட்டத்தின் இறுதி வரையும், கூடுதல் நேரத்திலும் இரு அணிகளும் கோல் எதுவும் போடவில்லை. இதனால் பெனால்டி "ஷூட் அவுட்" கடைபிடிக்கப்பட்டது.

இதில் பிரேசில் அணி 2-4 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறியது. உருகுவே அரையிறுதிக்கு முன்னேறியது.

பெனால்டி ஷூட் அவுட்டில் உருகுவே அணிக்காக வால்வர்ட், பென்டான்கர், அர்ராஸ்கேட்டா , உகர்டே கோல் அடித்தனர். ஜிம்மென்ஸ் வாய்ப்பை தவறவிட்டார். பிரேசில் அணியில் பெரைரா, மார்டினெலி கோல் அடித்தனர். மிலிட்டோ, டக்ளஸ் லூயிஸ் வாய்ப்பை தவறவிட்டனர்.

10-ந் தேதி நடைபெறும் முதல் அரை இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா-கனடா அணிகளும், 11-ந்தேதி நடக்கும் 2-வது அரை இறுதியில் உருகுவே-கொலம்பியா அணிகளும் மோதுகின்றன.

Tags:    

Similar News