கிரிக்கெட் (Cricket)
ஐ.பி.எல்: டி20 கிரிக்கெட்டும் மறக்க முடியாத சர்ச்சைகளும் - ஒரு பார்வை..!

ஐ.பி.எல்: டி20 கிரிக்கெட்டும் மறக்க முடியாத சர்ச்சைகளும் - ஒரு பார்வை..!

Published On 2025-03-23 12:33 IST   |   Update On 2025-03-23 12:33:00 IST
  • பல வீரர்கள் வாழ்க்கையை அடியோடு மாற்றியுள்ளது.
  • பல சம்பவங்கள் பேசு பொருளாக மாறியுள்ளன.

இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) வெறும் டி20 கிரிக்கெட் தொடர் என்ற நிலையை கடந்துவிட்டது. இன்று கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் தொடராக ஐ.பி.எல். மாறியுள்ளது. அணி மாறும் வீரர்கள், சொந்த ஊர், வீரர்களுக்கு ஆதரவளிக்கும் ரசிகர்கள் போட்டியின் போது ஏற்படும் பரபர சம்பவங்கள் இந்த தொடர் பிரபலமாகவே விளங்குவதற்கு காரணமாக இருக்கின்றன.

கடந்த 2008ம் ஆண்டு தொடங்கியதில் இருந்தே ஐ.பி.எல். தொடர் பல்வேறு ஏற்ற, இறக்கங்களை கண்டே வருகிறது. இந்த கிரிக்கெட் தொடர் பல வீரர்கள் வாழ்க்கையை அடியோடு மாற்றியுள்ளது. மேலும், பல வீரர்கள் வாய்ப்பை இழக்கவும் காரணமாக அமைந்துள்ளது. அந்த வகையில், ஐ.பி.எல். வரலாற்றில் இதுவரை அரங்கேறிய, பேசு பொருளாக மாறிய ஐந்து சர்ச்சைக்குரிய சம்பவங்களை தொடர்ந்து பார்ப்போம்..

 

ஸ்ரீசாந்தை அறைந்த ஹர்பஜன் சிங்:

2008ல் அறிமுக தொடரின் போது தான் முதல் சர்ச்சைக்குரிய சம்பவம் அரங்கேறியது. தொடரில் கிங்ஸ் XI பஞ்சாப் (தற்போது பஞ்சாப் கிங்ஸ்) மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய போட்டியின் போது தான் அந்த சம்பவம் நடந்தது. போட்டி முடிந்த பிறகு மும்பை வீரர் ஹர்பஜன் சிங் களத்தில் வைத்தே பஞ்சாப் அணி வீரர் ஸ்ரீசாந்தை கண்ணத்தில் அறைந்துவிட்டார்.

 

பாதுகாவலர்களிடம் ஷாருக் கான் வாக்குவாதம்:

2012ம் ஆண்டு நடந்த ஐ.பி.எல். சீசனில் அந்த ஆண்டு மே 16ம் தேதி நடந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மும்பையை வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தது. இந்தப் போட்டிக்கு பிறகு ஷாருக் கான் பாதுகாப்பு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதற்காக அவர் அந்த மைதானத்திற்குள் நுழைய ஐந்து ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது.

ஸ்பாட் ஃப்கிசிங் விவகாரம்:

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் கருப்பு பக்கங்களில் சிக்கிய விவகாரம் தான் ஸ்பாட் ஃபிக்சிங். பெட்டிங் தரகர் சுனில் பாட்டியா கைதுக்கு பிறகு நடந்த விசாரணையில் ராஜஸ்தான் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலியா மற்றும் அங்கீத் சாவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும், சென்னை அணியின் குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் அணி இணை உரிமையாளர் ராஜ் குந்த்ரா ஆகியோரும் சட்டவிரோத பெட்டிங்கில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விவகாரம் இந்திய கிரிக்கெட்டில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

விராட் கோலி - கவுதம் கம்பீர் மோதல்:

2013ம் ஆண்டு நடைபெற்ற போட்டி ஒன்றின் போது இந்திய வீரர்களான விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீர் களத்தில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து கடந்த 2023ம் ஆண்டு பெங்களூரு மற்றும் லக்னோ அணிகள் மோதிய போட்டியின் போதும் விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீர் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. இந்த சம்பவத்திற்காக இருவரின் போட்டி ஊதியம் அபராதமாக விதிக்கப்பட்டது.

களத்தில் வாக்குவாதம் செய்த எம்.எஸ். தோனி:

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி 2019ம் ஆண்டு நடந்த ஐ.பி.எல். தொடரின் சென்னை - ராஜஸ்தான் அணிகள் இடையிலான போட்டியின் போது களத்திற்குள் நுழைந்து அம்பயர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்தப் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது. எனினும், எம்.எஸ். தோனிக்கு போட்டி கட்டணத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

Tags:    

Similar News