சாம்பியன்ஸ் டிராபி: வெற்றியுடன் அரையிறுதிக்கு முன்னேறுமா இந்தியா? நியூசிலாந்துடன் இன்று மோதல்
- பாகிஸ்தான் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து வெளியேறியது.
- நியூசிலாந்து அணி இதுவரை விளையாடிய இரு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. எட்டு அணிகள் இரு பிரிவுகளாக பங்கேற்ற இந்த தொடரில் களமிறங்கின. இதில் ஏ பிரிவில் இந்தியா ம்றும் நியூசிலாந்து அணிகளும், பி பிரிவில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளும் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
ஏ பிரிவில் இடம்பெற்ற பாகிஸ்தான், வங்காளதேசம் அணிகளும் பி பிரிவில் இடம்பெற்று இருந்த இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் வெளியேற்றப்பட்டன.
நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரின் கடைசி லீக் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்தப் போட்டி துபாயில் நடைபெறுகிறது. இரு அணிகளும் இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.
அந்த வகையில் இன்று நடைபெறும் மூன்றாவது போட்டியிலும் வெற்றி பெற்று, அரையிறுதி சுற்றில் விளையாடும் முனைப்பில் களமிறங்குகின்றன.
இன்றைய போட்டியில் காயம் காரணமாக கேப்டன் ரோகித் சர்மா களமிறங்க மாட்டார் என்றும் அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் களமிறங்குவார் என்றும் தெரிகிறது. சுப்மன் கில் இந்திய அணியை வழிநடத்துவார் என்றும் துவக்க வீரர்களாக கே.எல். ராகுல் மற்றும் சுப்மன் கில் விளையாடுவார்கள் என்று கூறப்படுகிறது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும். இந்தப் போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.