ஐ.பி.எல். 2025 - இன்று நடக்கும் 2வது போட்டியில் சென்னை - மும்பை அணிகள் பலப்பரீட்சை
- ஐ.பி.எல். 2025 தொடரின் முதல் போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
- சென்னை அணியில் எம்.எஸ். தோனி அன்கேப்டு வீரராக தக்கவைக்கப்பட்டுள்ளார்.
பத்து அணிகள் பங்கேற்கும் 18வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் நேற்று பிரமாண்ட கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்தப் போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
இந்த நிலையில், இன்று ( ஞாயிற்றுக்கிழமை) 2 போட்டிகள் நடைபெற உள்ளன. ஐதராபாத்தில் மாலை 3.30 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
இரவு 7.30 மணிக்கு சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் 2-வது போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
சொந்த மைதானத்தில் முதல் போட்டியில் விளையாடும் சி.எஸ்.கே. வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது. இந்த சீசனில் எம்.எஸ். தோனி அன்கேப்டு வீரராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அந்த வகையில் தோனி எந்த வரிசையில் ஆடுவார் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
மும்பை இந்தியன்ஸ் அணியில் வழக்கமான கேப்டன் ஹர்திக் பாண்ட்யா விளையாட முடியாததால் சூர்யகுமார் யாதவ் அணியை வழி நடத்துகிறார். இரு அணிகளுமே ஐ.பி.எல்.கோப்பையை 5 முறை வென்றுள்ளன. இதனால் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும்.