பயிற்சியின் போது எம்.எஸ். தோனியை Hug செய்த ஹர்திக் பாண்ட்யா - வீடியோ வைரல்
- இன்றைய முதல் போட்டியில் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.
- சென்னை மற்றும் மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஐ.பி.எல். 2025 கிரிக்கெட் தொடர் நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின். இந்தப் போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்றதோடு, தற்போது புள்ளி பட்டியலிலும் முதலிடம் பிடித்துள்ளது.
இந்த நிலையில், இன்று ஐ.பி.எல். தொடரில் இரு போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இரண்டாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதனிடையே போட்டியை ஒட்டி இரு அணிகள் வீரர்களும் போட்டி நடைபெறும் சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது, களத்தில் பயிற்சி செய்து கொண்டிருந்த மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா எம்.எஸ். தோனியை கட்டியணைத்து அன்பை பொழிந்தார். மேலும், அவரின் கைகளை தொட்டுப் பார்த்து உரையாடிக் கொண்டிருந்தார்.
மைதானத்தில் ஹர்திக் பாண்ட்யா மற்றும் எம்.எஸ். தோனி கட்டியணைத்துக் கொண்டு, உரையாடிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இன்றிரவு நடைபெறும் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த சீசனில் மெதுவான பந்து வீச்சால் அவருக்கு ஒரு ஆட்டத்தில் தடை விதிக்கப்பட்டது. இந்த தடையால் அவர் இன்று நடைபெற இருக்கும் போட்டியில் விளையாட முடியவில்லை. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணியை சூர்யகுமார் யாதவ் வழி நடத்துகிறார்.