IPL 2025: சுனில் நரைனுக்கு ஹிட் விக்கெட் ஏன் கொடுக்கப்படவில்லை?
- அதிரடியாக விளையாடிய சுனில் நரைன் 26 பந்துகளில் 44 ரன்கள் அடித்து அவுட்டானார்.
- ஆர்சிபி அணி 16.2 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுக்கு இழந்து 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ஐபிஎல் 2025 சீசன் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கலைநிகழ்ச்சியுடன் இன்று கோலாகலமாக தொடங்கியது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக ஆர்சிபி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணி 16.2 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுக்கு இழந்து 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய சுனில் நரைன் 26 பந்துகளில் 44 ரன்கள் அடித்து அவுட்டானார். இப்போட்டியில் 8 ஓவரை ஆர்சிபி வீரர் ரசீக் சலாம் வீசினார். அந்த ஓவரில் சலாம் வீசிய வைட் பந்தை நரைன் அடிக்க முயன்றார். ஆனால் பேட்டில் பந்து படவில்லை. அதன்பின்பு அவர் பேட்டை கீழே இறக்கையில் தவறுதலாக பேட் ஸ்டம்ப்பில் பட்டு பைல்ஸ் கீழே விழுந்தது.
இதனால் நரைன் ஹிட் விக்கெட் ஆனார் என்று ஆர்சிபி ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் அந்த மகிழ்ச்சி சில நொடிகள் கூட நீடிக்கவில்லை. நடுவர் நரைனுக்கு அவுட் கொடுக்கவில்லை.
அந்த பந்தை நரைன் ஆடி முடிந்தபின்பு நடுவர் வைட் கொடுத்தார். பந்து வைட் என அறிவிக்கப்பட்டதால் ஹிட் விக்கெட் முறைப்படி நரைனுக்கு அவுட் கொடுக்கப்படவில்லை.