கிரிக்கெட் (Cricket)

தென் ஆப்பிரிக்கா டி20 லீக்: முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது எம்.ஐ.கேப் டவுன்

Published On 2025-02-09 01:05 IST   |   Update On 2025-02-09 01:05:00 IST
  • முதலில் ஆடிய எம்.ஐ.கேப் டவுன் அணி 181 ரன்கள் குவித்தது.
  • அடுத்து ஆடிய சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 105 ரன்னில் ஆல் அவுட்டானது.

கேப் டவுன்:

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 லீக் தொடரான ஐ.பி.எல். போன்று தென் ஆப்பிரிக்காவில் 20 ஓவர் லீக் (எஸ்.ஏ.20) கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. இதன் 3-வது சீசன் நடந்தது.

மொத்தம் 6 அணிகள் பங்கேற்று விளையாடின. இதன் லீக் சுற்று ஆட்டங்கள் கடந்த 2-ம் தேதி நிறைவடைந்தன. லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடித்த பார்ல் ராயல்ஸ், எம்.ஐ.கேப்டவுன், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மற்றும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றன.

தகுதிச்சுற்று 1 ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் அணியை எம்.ஐ.கேப்டவுன் அணி வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது. வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியை சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி வீழ்த்தியது. எலிமின்னேட்டர் 2 சுற்றில் பார்ல் ராயல்ஸ் அணியை சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி வீழ்த்தியது.

இந்நிலையில், இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் எம்.ஐ.கேப் டவுன், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் கேப் டவுன் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 181 ரன்கள் குவித்தது. அந்த அணியின் எஸடரூசியன் 39 ரன்னும், பிரேவிஸ் 38 ரன்னும், ரிக்கல்டன் 33 ரன்னும் எடுத்தனர்.

தொடர்ந்து ஆடிய சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 18.4 ஓவரில் 105 ரன்னில் ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக டாம் ஏபெல் 30 ரன்கள் எடுத்தார்.

இதன்மூலம் எம்.ஐ.கேப் டவுன் அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

எம்.ஐ.கேப் டவுன் சார்பில் ரபாடா 4 விக்கெட்டும், டிரெண்ட் போல்ட், ஜார்ஜ் லிண்டே தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

Tags:    

Similar News