முத்தரப்பு தொடர்: 78 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது நியூசிலாந்து
- முதலில் ஆடிய நியூசிலாந்து 50 ஓவரில் 330 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய பாகிஸ்தான் 252 ரன்களில் ஆல் அவுட்டாகி தோற்றது.
லாகூர்:
பாகிஸ்தான், நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது.
லாகூரில் இன்று நடந்த முதல் போட்டியில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த நியூசிலாந்து 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 330 ரன்கள் குவித்தது. 6-வது வீரராக களமிறங்கிய கிளென் பிலிப்ஸ் அதிரடியாக விளையாடி 74 பந்தில் 106 ரன்கள் விளாசினார். டேரில் மிட்செல் 81 ரன்னும், கேன் வில்லியம்சன் 58 ரன்னும் சேர்த்தனர். ரச்சின் ரவீந்திரா 25 ரன்னிலும் வெளியேறினார்.
பாகிஸ்தான் சார்பில் ஷாஹீன் அப்ரிடி 3 விக்கெட்டும், அப்ரார் அகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 331 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பகர் சமான் அதிரடியாக ஆடி 69 பந்தில் 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சல்மான் ஆகா 40 ரன்னும் தயாப் தாஹிர் 30 ரன்னும் எடுத்தனர்.
இறுதியில், பாகிஸ்தான் 47.5 ஓவரில் 252 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் நியூசிலாந்து 78 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. ஆட்ட நாயகன் விருது கிளென் பிலிப்சுக்கு அளிக்கப்பட்டது.