பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி: சாதனை படைத்த நியூசிலாந்து வீரர்கள்
- வில் யங், டாம் லாதம் ஆகியோருக்கு இது தான் முதலாவது சாம்பியன்ஸ் கோப்பை போட்டியாகும்.
- சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் வில் யங், டாம் லாதம் ஆகியோரையும் சேர்த்து இதுவரை 5 நியூசிலாந்து வீரர்கள் சதம் அடித்துள்ளனர்.
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதில் நேற்று நடந்த தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தானும், நியூசிலாந்தும் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் டாஸ் ஜெயித்த பாகிஸ்தான் கேப்டன் முகமது ரிஸ்வான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 320 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 47.2 ஓவர்களில் 260 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்த போட்டியில் சதம் விளாசிய டாம் லாதம் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் இந்த போட்டியில் நியூசிலாந்து அணி வீரர்களான டாம் லாதம், வில் யங் ஆகியோர் சாதனை படைத்துள்ளனர். அந்த வகையில் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் வில் யங், டாம் லாதம் ஆகியோரையும் சேர்த்து இதுவரை 5 நியூசிலாந்து வீரர்கள் சதம் அடித்துள்ளனர். ஏற்கனவே கிறிஸ் கெய்ன்ஸ், நாதன் ஆஸ்டில், கேன் வில்லியம்சன் ஆகியோர் சதம் அடித்து இருக்கிறார்கள்.
வில் யங், டாம் லாதம் ஆகியோருக்கு இது தான் முதலாவது சாம்பியன்ஸ் கோப்பை போட்டியாகும். சாம்பியன்ஸ் கோப்பையில் தங்களது அறிமுக ஆட்டத்திலேயே சதம் அடித்த முதல் நியூசிலாந்து வீரர்கள் இவர்கள் தான். மொத்தத்தில் அறிமுக ஆட்டத்தின் சதம் 10 ஆக உயர்ந்துள்ளது.
சாம்பியன்ஸ் கோப்பையில் ஒரே இன்னிங்சில் இரு வீரர்கள் சதம் காண்பது இது 5-வது நிகழ்வாகும்.