முதல் டி20: பாகிஸ்தானை புரட்டியெடுத்த நியூசிலாந்து 9 விக்கெட்டுகளில் அபார வெற்றி
- நியூசிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு செய்தது.
- நியூசிலாந்து அணி தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.
நியூசிலாந்து நாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகள் மோதும் முதலாவது டி20 போட்டி கிறிஸ்ட்சர்ச்-இல் இன்று நடைபெற்றது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர்களான முகமது ஹாரிஸ் மற்றும் ஹசன் நவாஸ் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆகினர். அடுத்து களமிறங்கிய கேப்டன் சல்மான் அக்வா 18 ரன்களில் நடையை கட்டினார்.
இவரைத் தொடர்ந்து ஆடிய இர்ஃபான் கான் (1), ஷதாப் கான் (3) வந்த வேகத்தில் நடையை கட்ட குஷ்தில் ஷா நிதானமாக ஆடி 32 ரன்களை சேர்த்தார். இவருடன் ஆடிய ஜகன்தாத் கான் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். இவர்கள் தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதன் காரணமாக பாகிஸ்தான் அணி 18.4 ஓவர்களில் வெறும் 91 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
நியூசிலாந்து சார்பில் ஜேகப் டஃபி 4 விக்கெட்டுகளையும், கைல் ஜேமிசன் 3 விக்கெட்டுகளையும், ஈஷ் சோதி 2 விக்கெட்டுகளையும், ஜகாரி ஃபௌல்க்ஸ் 1 விக்கெட் வீழ்த்தினார்.
எளிய இலக்கை துரத்திய நியூசிலாந்து அணி துவக்கம் முதலே அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது. நியூசிலாந்து அணியின் துவக்க வீரர்களில் ஒருவரான டிம் செய்ஃபெர்ட் 29 பந்துகளில் 44 ரன்களை விளாசினார். இவருடன் ஆடிய ஃபின் ஆலென் 17 பந்துகளில் 29 ரன்களை எடுத்தார். அடுத்து களமிறங்கிய டிம் ராபின்சன் 18 ரன்களை எடுத்தார்.
நியூசிலாந்து அணி 10.1 ஓவர்களில் 1 விக்கெட் இழந்து 92 ரன்களை எடுத்தது. இதன் மூலம் அந்த அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.