இந்தி மண்ணில் ஒலித்த தமிழ்.. "நான் ரெடி தான் வரவா" பாடலுடன் நடராஜனை வரவேற்ற டெல்லி அணி
- நடராஜனை ஐபிஎல் ஏலத்தில் ரூ.10.75 கோடிக்கு டெல்லி அணி வாங்கியது.
- நடராஜனை வரவேற்ற வீடியோவுக்கு ”தமிழ் சிங்கம் ரெடி” என டெல்லி அணி தலைப்பிட்டுள்ளது.
டெல்லி:
ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இன்னும் சில தினங்களில் நடைபெற உள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் வருகிற 22-ம் தேதி தொடங்குகிறது. கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.
இந்த தொடருக்காக அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழக வீரர் நடராஜன் டெல்லி அணியுடன் இன்று இணைந்துள்ளார். அவருக்கு இண்ட்ரோ வீடியோ கொடுத்து அசத்தலாக வரவேற்றது டெல்லி அணி.
நடராஜனை வரவேற்ற வீடியோவுக்கு தமிழில் லியோ படத்தில் வெளியான நான் ரெடியா தான் வரவா பாடலை பின்னணி இசையில் இசைத்துள்ளனர். மேலும் இதற்கு "தமிழ் சிங்கம் ரெடி" என தலைப்பிட்டுள்ளது. இது தமிழக ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் வீரர்கள் மட்டுமே தமிழில் அவ்வபோது பேசி வந்த நிலையில் மற்ற அணிகளும் தமிழை பின்பற்ற தொடங்கி உள்ளனர். குறிப்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் கடந்த இரண்டு வருடங்களாக தமிழில் வீடியோவை வெளியிட்டு வந்தனர். அந்த வகையில் டெல்லி அணியும் தமிழில் பதிவு செய்தது தமிழக ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
நடராஜனை ஐபிஎல் ஏலத்தில் ரூ.10.75 கோடிக்கு டெல்லி அணி வாங்கியது குறிப்பிடத்தக்கது