இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: வெற்றியின் விளிம்பில் தென் ஆப்பிரிக்கா
- இலங்கை அணி முதல் இன்னிங்சில் 42 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தது.
- 516 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி விளையாடி வருகிறது.
டர்பன்:
இலங்கை அணி 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளது.
இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 27-ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 191 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
இலங்கை சார்பில் அசிதா பெர்னாண்டோ, லஹிரு குமாரா தலா 3 விக்கெட்டும், விஷ்வா பெர்னாண்டோ, பிரபாத் ஜெயசூர்யா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 42 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தது.
தென் ஆப்பிரிக்கா சார்பில் மார்கோ யான்சென் 7 விக்கெட்டும், கோட்சி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
149 ரன்கள் முன்னிலை பெற்ற தென் ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சை தொடங்கியது. இரண்டாம் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 3 விக்கெட்டுக்கு 132 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. 4வது விக்கெட்டுக்கு ஸ்டப்ஸ், பவுமா ஜோடி இணைந்து பொறுப்புடன் ஆடியது. இருவரும் சதமடித்து அசத்தினர்.
4வது விக்கெட்டுக்கு 249 ரன்கள் சேர்த்த நிலையில் ஸ்டப்ஸ் 122 ரன்னில் அவுட்டானார். பவுமா 113 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில், தென் ஆப்பிரிக்க அணி 2வது இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 366 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
இதையடுத்து, 516 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது.
மூன்றாம் நாள் முடிவில் இலங்கை 5 விக்கெட்டுக்கு 103 ரன்கள் எடுத்துள்ளது.
இன்னும் இரு தினங்கள் மீதமுள்ள நிலையில் தென் ஆப்பிரிக்கா எஞ்சியுள்ள 5 விக்கெட்களை வீழ்த்தி வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.