கிரிக்கெட் (Cricket)

இந்த முறை வாய்ப்பு இல்ல.. ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு ஸ்டீவ் ஸ்மித் சவால்

Published On 2024-11-18 07:01 GMT   |   Update On 2024-11-18 07:01 GMT
  • 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் யாராலும் தப்பிக்க முடியாது.
  • கடந்த சீசனில் 2 போட்டிகளில் அஸ்வின் என்னை ஆதிக்கம் செலுத்தினார்.

சிட்னி:

கடந்த முறை ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்ட போது இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வினின் பவுலிங்கில் ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் தடுமாறி கொண்டே இருந்தார். அதேபோல் கடந்த ஆண்டு இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்ட போதும் அஸ்வினின் பவுலிங்கை எதிர்கொள்வதற்கு சிரமப்பட்டார்.

இதற்காக அஸ்வினை போலவே பவுலிங் செய்யும் ஒருவரை வைத்து பயிற்சி மேற்கொண்டார். இதனால் அஸ்வின் - ஸ்டீவ் ஸ்மித் இடையிலான போட்டியை காண்பதற்கு ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

இந்நிலையில்

இதுகுறித்து ஸ்டீவ் ஸ்மித் கூறியதாவது:-

5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் போது, ஒரு வீரர் மீது இன்னொரு வீரர் ஆதிக்கம் செலுத்த அதிக வாய்ப்புகள் உள்ளது. ஏனென்றால் 10 இன்னிங்ஸில் அந்த இரு வீரர்களும் நேரடியாக மோதுவார்கள். அப்படியான மோதல் ஏற்படும் போது மனதளவிலும் பல்வேறு சவால்களை நாம் சந்திக்க நேரிடும்.

சில நேரங்களில் அந்த பவுலரிடம் ஒரு பேட்ஸ்மேன் விரைவாக விக்கெட்டை பறிகொடுத்தால், அந்த பேட்ஸ்மேனுக்கு இயல்பாகவே அழுத்தம் அதிகரிக்கும். 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒழிந்து கொள்வதை போல், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் யாராலும் தப்பிக்க முடியாது.

கடந்த சில ஆண்டுகளாகவே எனக்கும் அஸ்வினுக்கும் இடையில் நல்ல மோதல் இருக்கிறது. அடிலெய்ட் மற்றும் எம்சிஜி மைதானத்தில் அஸ்வின் எனது விக்கெட்டை எடுத்தது இப்போதும் நினைவில் இருக்கிறது. அதில் எம்சிஜியில் லெக் ஸ்லிப் திசையில் விக்கெட்டை எடுத்திருந்தார். ஆஸ்திரேலியா மண்ணில் ஆஃப் ஸ்பின்னர்களிடம் ஆட்டமிழப்பதே எனக்கு பிடிக்காது. வலதுகை பேட்ஸ்மேன்களால் ஆஃப் ஸ்பின்னர்களை எளிதாக சமாளிக்க முடியும். ஆனால் அஸ்வின் மிகச்சிறந்த பவுலர். அவரும் நிச்சயம் சிறந்த திட்டங்களுடன் வருவார்.

கடந்த சீசனில் 2 போட்டிகளில் அஸ்வின் என்னை ஆதிக்கம் செலுத்தினார். அதேபோல் எஸ்சிஜி மைதானத்தில் கொஞ்சம் முன்னெச்சரிக்கையுடன் விளையாடி அஸ்வின் மீது என்னால் ஆதிக்கம் செலுத்த முடிந்தது. அதனால் இம்முறையும் முன்னெச்சரிக்கையாக இருப்பதே திட்டமாக உள்ளது. அவரை செட்டிலாகவிடாமல் ஒரே லெந்தில் வீச விடாமல் தடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News