சீனியர் ஆசிய சாம்பியன்ஷிப் மல்யுத்தம்: இந்திய வீராங்கனை ராதிகா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்
- ஜப்பான் வீராங்கனையை இறுதிப் போட்டியில் எதிர்கொள்கிறார்.
- 50 கிலோ எடைப்பிரிவில் ஷிவானி பவார் வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் களம் காண்கிறார்.
சீனியர் ஆசிய சாம்பியன்ஷிப் மல்யுத்தம் கிர்கிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இதில் 65 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை ராதிகா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
இறுதிப் போட்டியில் ஜப்பான் வீராங்கனை நோநோகா ஒசாக்கியை எதிர்கொள்கிறார். 23 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் கடந்த வருடம் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். கடந்த வருடம் நடைபெற்ற சீனியர் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியிலும் 2-வது இடம் பிடித்தார். கஜகஸ்தான், கிர்கிஸ்தான் வீராங்கனைகளை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
50 கிலோ எடைப்பிரிவில் ஷிவானி பவார் காலியுறுதியில் தோல்வியடைந்தார். ஆனால் அவரை வீழ்த்திய வீராங்கனை இறுதிப் போட்டிக்கு முன்னேறியதால், வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் களம் இறங்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
அதேபோல் 55 கிலோ எடைப்பிரிவில் தமன்னா 0-9 என தோல்வியடைந்த நிலையில், அவர் வீழ்த்திய வீராங்கனை இறுதிப் போட்டிக்கு முன்னேறியதால் பதக்கத்திற்கான போட்டியில் நீடிக்கிறார்.
அதேபோல் புஷ்பா யாதவ் (59 கிலோ), பிரியா (76 கிலோ) ஆகியோரும் தோல்வியடைந்தாலும் பதக்கப் போட்டிக்கான வாய்ப்பை பெற்றுள்ளனர். இவர்களை வீழ்த்திய வீராங்கனைகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியதால் இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.