விளையாட்டு

சென்னையில் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர்? அடுத்த வாரம் ஆலோசனை

Published On 2024-06-01 10:11 GMT   |   Update On 2024-06-01 10:11 GMT
  • மூன்று கூட்டமைப்புகள் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டு உள்ளன.
  • இம்மாத இறுதியில் முடிவுகள் அறிவிக்கப்படும்.

உலக செஸ் கூட்டமைப்பு (FIDE) சார்பில் இந்த ஆண்டு இறுதியில் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடத்தப்பட இருக்கிறது. இந்த ஆண்டு நவம்பர் 20 ஆம் தேதி துவங்கி டிசம்பர் 15, 2024 வரை உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற உள்ளன.

இந்த தொடரில் அடுத்த இரு ஆண்டுகள் உலக செஸ் சாம்பியனாக இருக்கப் போவது யார் என்ற கேள்விக்கு விடை தெரிந்துவிடும். உலக செஸ் சாம்பியன் படத்தை தக்க வைத்துக் கொள்ளும் முனைப்பில் சீனாவின் டிங் லைரென் களமிறங்குகிறார்.

மறுப்பக்கம் செஸ் வரலாற்றிலேயே இளம் வயதில் பங்கேற்கும் முதல் வீரர் என்ற பெருமையுடன் இந்திய வீரர் குகேஷ் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை பெறும் முனைப்பில் களமிறங்க உள்ளார். உலகின் அடுத்த செஸ் சாம்பியன் யார் என்பதை நிர்ணயிக்கும் போட்டிகளை நடத்த உலக செஸ் கூட்டமைப்பிடம் மூன்று கூட்டமைப்புகள் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டு உள்ளன.

இதில் தமிழ்நாடு அரசு சார்பில் சமர்பிக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தில் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளை சென்னையில் நடத்த வேண்டும் என்றும் டெல்லியில் நடத்த வேண்டும் என்று அகில இந்திய செஸ் கூட்டமைப்பும், சிங்கப்பூரில் நடத்த அந்நாட்டு அரசும் விண்ணப்பித்துள்ளன.

மூன்று விண்ணப்பங்களும் அடுத்த வாரம் நடைபெறும் உலக செஸ் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டத்தில் பரிசீலனை செய்யப்படும். இந்த ஆலோசனை கூட்டத்தில் விண்ணப்பதாரர்கள் சார்பில் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். ஆலோசனை கூட்டத்தில் செஸ் சாம்பியன்ஷிப் தொடர்பான கேள்விகளுக்கு பிரதிநிதிகள் பதில் அளிக்க வேண்டும். இதன் தொடர்ச்சியாக இம்மாத இறுதியில் உலக செஸ் கூட்டமைப்பு சார்பில் முடிவுகள் அறிவிக்கப்படும். 

Tags:    

Similar News