விஸ்வநாதன் ஆனந்தை முந்தினார்- இந்தியாவின் நம்பர் ஒன் செஸ் வீரரான தமிழகத்தை சேர்ந்த குகேஷ்
- கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 100 இடங்களுக்குள் வந்த அவர் 15 மாதங்களிலேயே 10 இடங்களுக்குள் நுழைந்து அசத்தியுள்ளார்.
- செஸ் வீரர் குகேஷ்க்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
சென்னை:
இந்தியாவின் நம்பர் ஒன் செஸ் வீரராக தமிழகத்தை சேர்ந்த குகேஷ் சாதனை படைத்துள்ளார்.
சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தரவரிசை பட்டியலில் (லைவ் ரேட்டிங்) 17 வயதான குகேஷ், 2755.9 புள்ளிகள் பெற்று 9-வது இடத்துக்கு முன்னேறினார். இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் 2754.0 புள்ளிகளுடன் 10-வது இடத்தில் உள்ளார். விஸ்வநாதன் ஆனந்தை முந்தியதன் மூலம் குகேஷ் இந்தியாவின் நம்பர் ஒன் செஸ் வீரர் ஆனார்.
செஸ் உலக கோப்பை (2023) தொடர் அஜர்பை ஜான் நாட்டின் பாகுவில் நடந்து வருகிறது. இதில் 2-வது சுற்றுக்கு முன்னேறிய குகேஷ், தன்னை எதிர்த்து விளையாடிய மிஸ்ட்ராடின் இஸ்கண்ட்ரோவை தோற்கடித்து பிறகு உலக தரவரிசை பட்டியலில் 9-வது இடத்துக்கு முன்னேறினார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 100 இடங்களுக்குள் வந்த அவர் 15 மாதங்களிலேயே 10 இடங்களுக்குள் நுழைந்து அசத்தியுள்ளார்.
5 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றவரான விஸ்வநாதன் ஆனந்த் 1986-ம் ஆண்டுக்கு பிறகு 37 ஆண்டுகளாக இந்தியாவின் நம்பர்-ஒன் வீரராக இருந்து வருகிறார். வருகிற செப்டம்பர் 1-ந்தேதி அடுத்த தரவரிசை பட்டியல் வெளியிடும் வரை குகேஷ், ஆனந்தை விட தொடர்ந்து ரேட்டிங்கில் முன்னிலையில் இருந்ததால் 1986-க்கு பிறகு ஆனந்தை முந்திய முதல் இந்தியர் என்ற பெருமையை குகேஷ் பெறுவார்.
இந்த நிலையில் செஸ் வீரர் குகேஷ்க்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைத்தளப் பதிவில் கூறி இருப்பதாவது:-
செஸ் உலகத் தரவரிசைப் பட்டியலின் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்து சாதனை படைத்துள்ள கிராண்ட்மாஸ்டர் குகேஷ்க்கு பாராட்டுகள்.
உங்களது உறுதியும் திறனும் செஸ் ஆட்டத்தின் மிக உயர்ந்த படிநிலைக்கு உங்களை உயர்த்தி, உலக அளவில் அதிகப் புள்ளிகளைப் பெற்றிருக்கும் இந்திய வீரராக உங்களை நிலைநிறுத்தி உள்ளன.
உங்களது சாதனை உலகெங்குமுள்ள இளந்திறமையாளர்களுக்கு ஊக்கமாகவும் நமது தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்ப்பதாகவும் அமைந்துள்ளது.
இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.