விளையாட்டு

ஏடா மோனே... வேட்டி, சட்டையணிந்து வெண்கல பதக்கத்துடன் ஹாக்கி வீரர் ஸ்ரீஜேஷ்

Published On 2024-08-11 10:28 GMT   |   Update On 2024-08-11 10:28 GMT
  • இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றது.
  • ஹாக்கி அணியின் கோல் கீப்பர் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

ஒலிம்பிக் ஹாக்கியில் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி மீண்டும் வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றியது.1972-ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக இந்தியா தொடர்ச்சியாக 2-வது முறையாக பதக்கத்தை வென்றுள்ளது. இதன் மூலம் ஒலிம்பிக் வரலாற்றில் இந்திய ஹாக்கி அணி வென்ற பதக்க எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது.

இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றதைத் தொடர்ந்து அணியின் கோல் கீப்பர் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். கடந்த 1988-ம் ஆண்டு கேரளாவில் கொச்சியில் பிறந்து வளர்ந்த பிஆர் ஸ்ரீஜேஷ், கடந்த 2011-ம் ஆண்டு முதல் இந்திய அணியில் கோல் கீப்பராக இடம் பெற்று விளையாடி வந்துள்ளார்.

2016 -ம் ஆண்டு இந்திய அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்றார். அதன் பிறகு சில ஆண்டுகளில் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார். கடந்த 2021-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா ஸ்ரீஜேஷ் உதவியுடன் வெண்கலப் பதக்கம் வென்றது. ஹாக்கி இந்தியா அணியில் சிறந்த பங்களிப்பை அளித்ததன் மூலமாக கேல் ரத்னா விருது பெற்றுள்ளார்.

ஓய்வு அறிவித்ததை தொடர்ந்து ஜூனியர் ஹாக்கி இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ஸ்ரீஜேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், பாரிஸ் ஒலிம்பிக்கில் வென்ற வெண்கல பதக்கத்துடன் வேட்டி, சட்டையணிந்து ஈபிள் டவர் முன் நின்று எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் ஸ்ரீஜேஷ் பகிர்ந்துள்ளார்.

ஒலிம்பிக் நிறைவு விழாவில் இரட்டை வெண்கலம் வென்ற மனு பாக்கர் இந்திய தேசியக் கொடியை ஏந்திச் செல்லவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News