விளையாட்டு
null

நான் கிட்டத்தட்ட இறந்துவிட்டேன்.. தோற்றாலும் எனக்கு இது வெற்றிதான் - மைக் டைசன்

Published On 2024-11-17 03:56 GMT   |   Update On 2024-11-17 07:03 GMT
  • பிரபல குத்துச்சண்டை வீரரான மைக் டைசனை ஜேக் பால் தோற்கடித்தார்.
  • சில சூழ்நிலைமைகளில் நீங்கள் தோற்றாலும் அது வெற்றிதான்.

முன்னாள் உலக 'ஹெவிவெயிட்' சாம்பியனான மைக் டைசன் (58 வயது), இதுவரை விளையாடிய 58 குத்துச்சண்டை போட்டியில், 50-ல் வெற்றி கண்டுள்ளார். இதில் 44 போட்டியில் எதிரணி வீரரை 'நாக்-அவுட்' முறையில் வீழ்த்தினார். ஆறு போட்டியில் மட்டும் தோல்வியடைந்தார். எதிரணி வீரரின் காதை கடித்தது, பாலியல் பலாத்காரம், போதை பழக்கம் என பல சர்ச்சையில் சிக்கியதால் தொடர்ந்து போட்டியில் பங்கேற்கவில்லை. சுமார் 20 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் தொழில்முறை போட்டிக்கு திரும்பினார்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள எர்லிங்டன் நகரில், தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டியில் மைக் டைசன் உடன் ஜேக் பால் மோதினார். இப்போட்டியில் பிரபல குத்துச்சண்டை வீரரான மைக் டைசனை ஜேக் பால் தோற்கடித்தார்.

8 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியில் ஜேக்பால் 79-73 என்ற புள்ளிக் கணக்கில் மைக் டைசனை வீழ்த்தினார். மைக் டைசனுக்கு ரூ.170 கோடி கிடைக்கும் என்பதால் தான் அவர் இந்தப் போட்டிக்கு ஒப்புக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொண்டது குறித்து மைக் டைசன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில், "சில சூழ்நிலைமைகளில் நீங்கள் தோற்றாலும் அது வெற்றிதான். நேற்றைய இரவுக்கு நான் நன்றியுள்ளவனாக இருப்பேன். கடைசியாக ஒருமுறை பாக்சிங் ரிங்கிற்குள் வந்ததை நினைத்து நான் வருத்தப்படவில்லை.

நான் கிட்டத்தட்ட கடந்த ஜூன் மாதம் இறந்துவிட்டேன். எனக்கு 8 முறை ரத்தம் ஏற்றப்பட்டது. மருத்துவமனையில் பாதி இரத்தத்தையும் 25 பவுண்டுகள் எடையையும் இழந்தேன். உடல்நலத்துடன் இருக்கவே நான் போராட வேண்டியிருந்தது. ஆனால் அதில் நான் வெற்றி பெற்றேன்.

நான் உறுதியுடன் ரிங்கிற்குள் இருப்பதை என் குழந்தைகள் பார்க்க வேண்டும். என் வயதில் பாதியை உடைய ஒரு திறமையான போராளியுடன் 8 ரவுண்டுகள் சண்டையிட்டேன். இது மிக சிறந்த அனுபவம். நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News