உலக கோப்பை ஹாக்கி: வேல்ஸ் அணியை வீழ்த்தியது இந்தியா
- லீக் சுற்றின் முடிவில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் 7 புள்ளிகளுடன் சமநிலை பெற்றிருந்தன.
- காலிறுதியை உறுதி செய்வதற்கான இந்த கிராஸ்ஓவர் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை இந்தியா எதிர்கொள்கிறது.
புவனேஸ்வர்:
ஒடிசாவில் நடைபெற்று வரும் உலக கோப்பை ஹாக்கி தொடரில் இன்று இந்திய அணி தனது (டி பிரிவு) கடைசி லீக் ஆட்டத்தில் வேல்ஸ் அணியை எதிர்கொண்டது. ஆட்டத்தின் முதல் பாதியில் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 2 கோல் அடித்து முன்னிலை பெற்றது. ஷாம்சர் சிங் 21வது நிமிடத்திலும், ஆகாஷ்தீப் சிங் 32வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இதற்கு பதிலடி கொடுத்த வேல்ஸ் அணி 42 மற்றும் 44வது நிமிடங்களில்கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்புகளை கோலாக்கியது.
அதன்பின்னர் ஆகாஷ்தீப் சிங் 45வது நிமிடத்தில் அசத்தலான பீல்டு கோல் அடிக்க, இந்தியா மீண்டும் முன்னிலை பெற்றது. 59வது நிமிடத்தில் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் பெனால்டி கார்னர் வாய்ப்பில் கோல் அடித்தார். இதனால் இந்தியா 4-2 என வெற்றி பெற்றது. இருப்பினும் இந்திய அணியால் டி பிரிவில் முதலிடத்தை பிடிக்க முடியவில்லை.
லீக் சுற்றின் முடிவில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் 7 புள்ளிகளுடன் சமநிலை பெற்றிருந்தன. ஆனால் கோல்கள் அடிப்படையில் முதலிடம் பிடித்த இங்கிலாந்து காலிறுதிக்கு முன்னேறியது. இந்திய அணி 2வது இடத்தை பெற்று அடுத்த சுற்றில் (கிராஸ்ஓவர் போட்டி) விளையாட உள்ளது. காலிறுதியை உறுதி செய்வதற்கான இந்த கிராஸ்ஓவர் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை இந்தியா எதிர்கொள்கிறது.