null
ஆசிய பெண்கள் 5 பேர் ஹாக்கி- மலேசியாவை வீழ்த்தி உலகக் கோப்பைக்கு தகுதிப் பெற்றது இந்தியா
- இந்திய கேப்டன் நவ்ஜோத் கவுர் ஹாட்ரிக் கோல் அடித்து சாதனை படைத்தார்.
- அடுத்த ஆண்டு உலகக் கோப்பைக்கு இந்திய பெண்கள் அணி தகுதி பெற்றது.
சலாலா:
ஒரு அணியில் 5 பேர் களம் காணும் முதலாவது உலகக்கோப்பை ஹாக்கி போட்டி ஓமன் தலைநகர் மஸ்கட்டில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடக்கிறது. இந்த தொடருக்கு போட்டியை நடத்தும் ஓமன் நேரடியாக தகுதி பெறும். மற்ற 5 மண்டலங்களில் நடைபெறும் தகுதி சுற்று போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் தகுதி அடையும். உலகக்கோப்பை போட்டிக்கான ஆசிய மண்டல பெண்கள் 5 பேர் ஹாக்கி தகுதி சுற்று போட்டி ஓமன் நாட்டின் சலாலா நகரில் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) தொடங்கியது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி மலேசிய அணியை எதிர் கொண்டது. லீக் சுற்றை போலவே இதிலும் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 9-5 என்ற கோல் கணக்கில் மலேசிய அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது. இந்திய அணி தரப்பில் நவ்ஜோத் கவுர் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். அவரே இந்த ஆட்டத்தின் ஆட்டநாயகியாகவும் தேர்வு செய்யப்பட்டார். இந்த தொடரில் இந்திய அணி தோல்வியே சந்திக்காமல் வீருநடை போடுகிறது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி ஒமன் நாட்டில் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ளது.
இந்திய அணி இறுதி போட்டியில் தாய்லாந்து அணியுடன் இன்று இரவு பலபரீட்சை நடத்த உள்ளது. முன்னதாக இவ்விரு அணிகள் மோதிய லீக் சுற்றில் இந்திய அணி தாய்லாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.