விளையாட்டு

பாரீஸ் பாரா ஒலிம்பிக்: 84 வீரர் வீராங்கனைகளுடன் களமிறங்கும் இந்தியா

Published On 2024-08-26 05:39 GMT   |   Update On 2024-08-26 05:39 GMT
  • இந்தியா இந்த முறை 12 விளையாட்டுகளில் பங்கேற்கிறது.
  • 2020 டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் 54 வீரர்கள் சென்று 19 பதக்கங்களை இந்தியா வென்றது.

பாரீஸ்:

பாரீஸ் பரா ஒலிம்பிக் போட்டிகள் நாளை மறுநாள் தொடங்க உள்ளன. ஆகஸ்ட் 28 முதல் பிரான்ஸ் தலைநகரில் பாரா விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த முறை இந்தியா தரப்பில் 84 வீரர் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இது இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு சாதனை என்றே சொல்லலாம். 2020 டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் 54 வீரர்கள் சென்று 19 பதக்கங்களை இந்தியா வென்றது.

இந்தியா இந்த முறை 12 விளையாட்டுகளில் பங்கேற்கிறது. குறிப்பாக தடகளத்தில் மட்டும் இந்தியாவின் 38 போட்டியாளர்கள் இருப்பார்கள். வில்வித்தை, பேட்மிண்டன், சைக்கிள் ஓட்டுதல், ஜூடோ, பாரா கயாக்கிங், பவர்லிஃப்டிங், ரோயிங், துப்பாக்கி சுடுதல், டேபிள் டென்னிஸ், டெக்வாண்டோ போன்ற விளையாட்டுகளில் இந்திய வீரர்கள் களமிறங்குகின்றனர்.

கடந்த பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற சுமித் அந்தில், மாரியப்பன் தங்கவேலு, சுஹான் எல்.ஒய், கிருஷ்ணா நாகர், அவனி லேகாரா, மணீஷ் நர்வால், பவீனா படேல், நிஷாத் குமார் உள்ளிட்டோர் இந்த முறையும் தகுதி பெற்றுள்ளனர். இவர்கள் மீண்டும் பதக்கம் வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இளம் பாரா வில்வித்தை வீரரான சீதல் தேவி, இரண்டு கைகளும் இல்லாத போதிலும் உலக தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார். இவர் இந்தியாவின் மிகப்பெரிய பதக்க நம்பிக்கையாக கருதப்படுகிறார்.

பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை இந்தியா மொத்தம் 9 தங்கம், 12 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 31 பதக்கங்களை வென்றுள்ளது. இந்த முறை குறைந்தது 25 பதக்கங்களை வென்று அரை சதத்தை எட்டும் ஆர்வத்தில் உள்ளது.

முதல் முறையாக இந்தியா பாரா ஒலிம்பிக் போட்டிகளில் 12 விளையாட்டுகளில் தனது வீரர்களை களமிறக்குகிறது. 38 பேர் தடகளத்தில் பல்வேறு பிரிவுகளில் களமிறங்குவார்கள்.

3 ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்ற 16-வது பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா 19 பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்தது. இந்த முறை குறைந்தது 25 பதக்கங்கள் வெல்லும் இலக்குடன் இந்திய அணி பாரிஸ் வந்துள்ளது.

பாரா ஒலிம்பிக் போட்டிகளில் கர்நாடகாவிலிருந்து 3 பேர் பங்கேற்க உள்ளனர். பெண்களுக்கான 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ரக்ஷிதா ராஜு, துப்பாக்கி சுடுதலில் ஸ்ரீஹர்ஷா மற்றும் பவர்லிஃப்டிங்கில் சகீனா கதுன் ஆகியோர் களமிறங்குவார்கள். கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்ட, தற்போது உத்தரபிரதேசத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி வரும் பேட்மிண்டன் நட்சத்திரம் சுஹாஸ் யாதவ்வும் போட்டிகளில் பங்கேற்க உள்ளார்.

Tags:    

Similar News