கோவாவில் தேசிய விளையாட்டு- தமிழ்நாட்டில் இருந்து 446 பேர் பங்கேற்பு
- தேசிய விளையாட்டு போட்டியில் தமிழ்நாட்டில் இருந்து 446 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கிறார்கள்.
- பிரதமர் நரேந்திர மோடி இந்த போட்டியை தொடங்கி வைக்கிறார்.
சென்னை:
37-வது தேசிய விளையாட்டுப் போட்டி வருகிற 25-ந் தேதி முதல் நவம்பர் 9-ந் தேதி வரை கோவாவில் நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி இந்த போட்டியை தொடங்கி வைக்கிறார். மொத்தம் 49 விளையாட்டுகள் நடைபெறும் இந்த போட்டியில் அனைத்து மாநிலங்களில் இருந்தும் வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.
தேசிய விளையாட்டு போட்டியில் தமிழ்நாட்டில் இருந்து 446 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கிறார்கள். 116 அதிகாரிகளுடன் இந்த குழு பங்கேற்கிறது.
அதிகபட்சமாக தடகளத்தில் இருந்து 80 பேரும், கால்பந்து, கூடைபந்து போட்டியில் தலா 40 பேரும் கலந்து கொள்கிறார்கள்.
தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி அவர்களை வழியனுப்பும் நிகழ்ச்சி நேரு ஸ்டேடியத்தில் நடந்தது. தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க தலைவர் ஐசரி கணேஷ் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் சி.லதா உள்ளிட்டோர் பங்கேற்று தமிழக வீராங்கனைகளை வாழ்த்தி வழியனுப்பினர்.