விளையாட்டு

தேசிய சீனியர் ஹாக்கி: கால்இறுதியில் தமிழக அணி தோல்வி

Published On 2024-11-14 03:03 GMT   |   Update On 2024-11-14 03:03 GMT
  • மற்றொரு கால்இறுதியில் மராட்டியம்-அரியானா அணிகள் மோதின.
  • அரியானா 5-1 என்ற கோல் கணக்கில் மராட்டியத்தை விரட்டியடித்து அரைஇறுதியை எட்டியது.

சென்னை:

14-வது ஹாக்கி இந்தியா தேசிய சீனியர் ஆண்கள் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. 30 மாநில அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் 8 அணிகள் கால்இறுதிக்குள் நுழைந்தன.

நேற்று நடந்த முதலாவது கால்இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பஞ்சாப்-மணிப்பூர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. தொடக்கம் முதலே விறுவிறுப்பாக நகர்ந்த இந்த ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இதைத்தொடர்ந்து வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க ஷூட்-அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் மணிப்பூர் 4-3 என்ற கோல் கணக்கில் பஞ்சாப்புக்கு அதிர்ச்சி அளித்து அரைஇறுதிக்கு முன்னேறியது.

மற்றொரு கால்இறுதியில் மராட்டியம்-அரியானா அணிகள் மோதின. 12-வது நிமிடத்தில் மராட்டிய வீரர் அனிகெட் கவுரவ் கோலடித்தார். இதனால் முதல் பாதியில் அந்த அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. கடைசி 15 நிமிடங்களில் அபாரமாக ஆடிய அரியானா அணி, மராட்டியத்துக்கு கடும் நெருக்கடி அளித்ததுடன் அடுத்தடுத்து 5 கோல்களை அடித்து மிரட்டியது.முடிவில் அரியானா 5-1 என்ற கோல் கணக்கில் மராட்டியத்தை விரட்டியடித்து அரைஇறுதியை எட்டியது. அரியானா தரப்பில் ரஜிந்தர் சிங் (48-வது நிமிடம்), ரோகித் (53-வது, 59-வது, 60-வது நிமிடம்), பங்கஜ் (54-வது நிமிடம்) ஆகியோர் கோல் போட்டனர்.

இன்னொரு கால்இறுதியில் தமிழக அணி 1-3 என்ற கோல் கணக்கில் உத்தரபிரதேசத்திடம் தோற்று ஏமாற்றம் அளித்தது.

உத்தரபிரதேச அணியில் சந்தன் சிங் (3-வது நிமிடம்), ராஜ்குமார் பால் (18-வது நிமிடம்), லலித்குமார் உபாத்யாய் (34-வது நிமிடம்) ஆகியோர் கோலடித்தனர். தமிழக அணி தரப்பில் சண்முகவேல் (9-வது நிமிடம்) பதில் கோல் திருப்பினார்.

கர்நாடகா - ஒடிசா இடையிலான கால்இறுதி ஆட்டம் வழக்கமான நேரத்தில் 3-3 என்ற கோல் கணக்கில் சமனில் முடிய, அதன் பிறகு கொண்டு வரப்பட்ட ஷூட்-அவுட்டில் ஒடிசா அணி 3-1 என்ற கோல் கணக்கில் கர்நாடகாவை வெளியேற்றி அரைஇறுதிக்கு தகுதி பெற்றது.

நாளை நடைபெறும் அரைஇறுதி ஆட்டங்களில் மணிப்பூர்- ஒடிசா (பிற்பகல் 2 மணி), அரியானா-உத்தரபிரதேசம் (மாலை 4 மணி) அணிகள் மோதுகின்றன.

Tags:    

Similar News