தேசிய விளையாட்டு போட்டி- தமிழக அணிக்கு ஒரே நாளில் 8 பதக்கம்
- 7 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக வீராங்கனைகள் இந்த சாதனையை முறியடித்தனர்.
- பெண்களுக்கான பளு தூக்கும் போட்டியிலும் தங்கம் கிடைத்தது.
அகமதாபாத்:
36-வது தேசிய விளையாட்டு போட்டி குஜராத் மாநிலத்தில் உள்ள 6 நகரங்களில் நடைபெற்று வருகிறது.
3-வது நாள் போட்டி முடிவில் தமிழ்நாடு 8 தங்கம், 8 வெள்ளி, 9 வெண்கலம் ஆக மொத்தம் 25 பதக்கம் பெற்று இருந்தது. 4-வது நாளான நேற்று தமிழகத்துக்கு மேலும் 8 பதக்கம் கிடைத்தது. இதில் 4 தங்கப்பதக்கம் அடங்கும்.
பெண்களுக்கான 4x400 மீட்டர் தொடர் ஆட்டத்தில் தங்கம் கிடைத்தது. திவ்யா, வித்யா, ஒலிம்பியன் ஸ்டெபி, சுபா வெங்கடேசன் ஆகியோர் அடங்கிய அணி பந்தய தூரத்தை 3 நிமிடம் 35.32 வினாடியில் கடந்து முதல் இடத்தை பிடித்து புதிய சாதனை படைத்தது.
இதற்கு முன்பு 2015-ம் ஆண்டு கேரளா 3 நிமிடம் 35.94 வினாடியில் கடந்ததே சாதனையாக இருந்தது. 7 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக வீராங்கனைகள் இந்த சாதனையை முறியடித்தனர்.
பெண்களுக்கான பளு தூக்கும் போட்டியிலும் தங்கம் கிடைத்தது. 76 கிலோ பிரிவில் ஆரோக்யா அலிஷா தங்கம் வென்று சாதித்தார். பளு தூக்குதலில் தமிழகத்துக்கு கிடைத்த 2-வது தங்கமாகும்.
ரோலெர்ஸ்கெட்டிங்கில் ஆரத்தி கஸ்தூரிராஜ், கார்த்திகா, மீனாலோஹினி, கோபிகா ஆகியோர் அடங்கிய பெண்கள் ரிலே அணிக்கு தங்கப் பதக்கம் கிடைத்தது.
ஆனந்தகுமார், சுவிஸ், செல்வக்குமார், இர்பான் ஆகியோர் அடங்கிய தமிழக ஆண்கள் அணி இதே பிரிவில் வெள்ளிப் பதக்கம் பெற்றது.
நீச்சல் பந்தயத்தில் இரண்டு பதக்கம் கிடைத்தது. பவன்குப்தா, சத்ய சாய்கிருஷ்ணன், பெனடிக்ட் ரோகித், ஆதித்யா ஆகியோர் அடங்கிய தமிழக அணி 4x10 மீட்டர் பிரீஸ்டைலில் வெள்ளி பதக்கமும், மனன்யா, அத்விகா, பிரமிதா, சக்தி ஆகியோர் அடங்கிய தமிழக பெண்கள் அணி 4x100 மீட்டர் பிரீஸ்டைலில் வெண்கல பதக்கமும் பெற்றனர்.
தடகளத்தில் ஆண்களுக்கான 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் சதீஷ்குமார், மோகன்குமார், சரண், ராஜேஷ் ஆகியோர் அடங்கிய அணி வெண்கல பதக்கம் பெற்றது.
தேசிய விளையாட்டுப் போட்டியின் பதக்க பட்டியலில் தமிழக அணி 4-வது இடத்தில் இருக்கிறது. 12 தங்கம், 9 வெள்ளி, 12 வெண்கலம் ஆக மொத்தம் 33 பதக்கம் பெற்றுள்ளது. சர்வீசஸ் 23 தங்கம் உள்பட 51 பதக்கத்துடன் முதல் இடத்தில் உள்ளது.