பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவர்களுக்கு ரூ.75 லட்சம் பரிசு
- தங்கம் வென்றவர்களுக்கு ரூ.75 லட்சம் வழங்கப்பட்டது.
- வெள்ளி வென்றவர்களுக்கு ரூ.50 லட்சம் வழங்கப்பட்டது.
புதுடெல்லி:
மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாராஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. இதில் இந்தியா 7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலம் என்று மொத்தம் 29 பதக்கங்களுடன் 18-வது இடத்தை பிடித்து வரலாறு படைத்தது. பாராஒலிம்பிக் வரலாற்றில் இந்தியாவின் அதிகபட்ச பதக்க எண்ணிக்கை இது தான்.
ஒலிம்பிக்கை முடித்துக் கொண்டு நேற்று தாயகம் திரும்பிய எஞ்சிய இந்திய அணியினருக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மத்திய விளையாட்டு அமைச்சகம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் பதக்கம் வென்றவர்களுக்கு ஊக்கத்தொகைக்கான காசோலையை மத்திய விளையாட்டுத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா வழங்கினார்.
தங்கம் வென்றவர்களுக்கு ரூ.75 லட்சம், வெள்ளி வென்றவர்களுக்கு ரூ.50 லட்சம், வெண்கலம் பெற்றவர்களுக்கு ரூ.30 லட்சம் வீதம் வழங்கி பாராட்டினார்.
அவர்கள் மத்தியில் மந்திரி மன்சுக் மாண்டவியா பேசுகையில், 'பாராஒலிம்பிக்கிலும், பாரா விளையாட்டிலும் இந்தியா வளர்ந்து வருகிறது. 2016-ம் ஆண்டு பாராஒலிம்பிக்கில் 4 பதக்கம் கைப்பற்றிய இந்தியா 2021-ம் ஆண்டில் 19 பதக்கமும், இப்போது 29 பதக்கமும் வென்று இருக்கிறது. எங்களது பாரா வீரர், வீராங்கனைகளுக்கு எல்லா விதமான வசதி வாய்ப்புகளும் நாங்கள் தொடர்ந்து செய்து கொடுப்போம். 2028-ம் ஆண்டு லாஸ்ஏஞ்சல்ஸ் பாரா ஒலிம்பிக்கில் நிச்சயம் இதை விட அதிக பதக்கங்கள் வெல்ல முடியும்.
நீங்கள் தேசத்துக்காக வெற்றியை கொண்டு வந்துள்ளீர்கள். சவாலான உங்களது வாழ்க்கையில் சவால்களை வெற்றிகரமாக கடந்திருப்பதை நிரூபித்து காட்டியிருக்கிறீர்கள். விளையாடுவதை நீங்கள் இப்போது நிறுத்தி விடக்கூடாது. நாம் 2028-ம்ஆண்டு பாராஒலிம்பிக் மற்றும் அதன் பிறகு நடக்கும் 2032-ம்ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் பணியை இப்போதே தொடங்க வேண்டும். அப்போது தான் நிறைய பதக்கங்களை வெல்ல முடியும். 2036-ம் ஆண்டு ஒலிம்பிக் மற்றும் பாராஒலிம்பிக்கை நடத்தும் வாய்ப்பு கிட்டும் போது, நமது மிகச்சிறந்த செயல்பாடு வெளிப்பட வேண்டும் என்பதே இலக்கு' என்றார்.