விளையாட்டு

அலிசன் ரிஸ்க்


சென்னை ஓபன் மகளிர் டென்னிசில் முன்னணி வீராங்கனைகள் பங்கேற்பு

Published On 2022-08-18 15:23 IST   |   Update On 2022-08-18 15:23:00 IST
  • செக்குடியரசை சேர்ந்த 15 வயதான லிண்டா அனைவரது கவனத்தையும் ஈர்க்கக் கூடியவர் ஆவார்.
  • ஸ்பெயினின் நடால் தனது 16 வயதில் சென்னை ஓபனில் கலந்து கொண்டு விளையாடி இருந்தார்.

சென்னை:

சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி முதல் முறையாக நடத்தப்படுகிறது.

இந்த போட்டி செப்டம்பர் 12-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. மைதானத்தில் நடக்கிறது.

இந்தத் தொடரில் கலந்து கொள்ளும் வெளிநாட்டு முன்னணி வீராங்கனைகளின் பட்டியலை மகளிர் டென்னிஸ் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.

இதன்படி ஒற்றையர் பிரிவில் மொத்தம் 32 வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். உலகத் தரவரிசையில் 29-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் அலிசன் ரிஸ்க், பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டென்ஸ் (33-வது இடம்), பிரான்சின் கரோலின் கார்சியா (35), ரஷியாவின் வார்வரா கிராச்சேவா (60), போலந்தின் மேக்டா லினெட் (70), சுவீடனின் ரெபேக்கா பீட்டர்சன் (87), ஜெர்மனியின் தட்ஜானா மரியா (93), சீனாவின் கியாங் வாங் (103), பிரான்சின் கிளோ பாகுட் (111),

கனடாவின் ரெபேக்கா மரினோ (113), ஜப்பானின் மோயுகா உச்சிமா (131), ரஷ்யாவின் ஒசானா செலக்மேதவா (145), அனா பிளின்கோவா (151), அனஸ்டசியா கசநோவா (156), செக்குடியரசின் லிண்டா ப்ருஹ்விர்டோவா (157), போலந்தின் கதர்சினா காவா (160), பெல்ஜியத்தின் யானினா விக்மேயர் (162), அன்டோராவின் விக்டோரியா ஜிமினெஸ் (165), நெதர்லாந்தின் அரியன்னே ஹார்டோனோ (166), சுவிட்சர்லாந்தின் ஜோன் ஜுகர் (167), பிரிட்டனின் கேட்டி ஸ்வான் (177) ஆகியோர் சென்னை ஓபனில் ஆடுகிறார்கள்.

இவர்களில் பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டன்ஸ், 2018-ம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனில் அரைஇறுதி வரை முன்னேறியிருந்தார்.

ஸ்பெயினின் கரோலின் கார்சியா 2017 மற்றும் 2022-ல் பிரெஞ்சு ஓபனில் கால் இறுதி வரை கால் பதித்திருந்தார். ஜெர்மனியை சேர்ந்த தட்ஜானா மரியா 2 குழந்தைகளுக்கு தாயான நிலையில் இந்தத் தொடரில் கலந்து கொள்கிறார்.

செக்குடியரசை சேர்ந்த 15 வயதான லிண்டா அனைவரது கவனத்தையும் ஈர்க்கக் கூடியவர் ஆவார். ஏனெனில் ஸ்பெயினின் நடால் தனது 16 வயதில் சென்னை ஓபனில் கலந்து கொண்டு விளையாடி இருந்தார்.

Tags:    

Similar News