இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர்-ஒருநாள் போட்டி: நியூசிலாந்து அணி அறிவிப்பு
- இந்தியாவுக்கு எதிராக 20 ஓவர் மற்றும் ஒரு நாள் போட்டி தொடர்களில் விளையாடும் நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
- கேப்டனாக கேன் வில்லியம்சன் நீடிக்கிறார். வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட், தொடக்க வீரர் மார்டின் குப்தில் ஆகியோர் இடம் பெறவில்லை.
வெலிங்டன்:
இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டி தொடர்களில் விளையாடுகிறது. இந்த தொடர்களில் ரோகித் சர்மா, விராட்கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
20 ஓவர் போட்டிக்கு ஹர்த்திக் பாண்ட்யாவும், ஒரு நாள் போட்டி தொடருக்கு ஷிகர் தவானும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மூன்று ஆட்டம் கொண்ட 20 ஓவர் போட்டி தொடர் வருகிற 18-ந்தேதி தொடங்குகிறது. 2-வது போட்டி 20-ந் தேதியும், 3-வது போட்டி 22-ந் தேதியும் நடக்கிறது.
3 ஆட்டம் கொண்ட ஒருநாள் போட்டி தொடர் 25-ந் தேதி தொடங்குகிறது.
இந்தநிலையில் இந்தியாவுக்கு எதிராக 20 ஓவர் மற்றும் ஒரு நாள் போட்டி தொடர்களில் விளையாடும் நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
கேப்டனாக கேன் வில்லியம்சன் நீடிக்கிறார். வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட், தொடக்க வீரர் மார்டின் குப்தில் ஆகியோர் இடம் பெறவில்லை.
குப்தில் சமீப காலமாக ரன் குவிக்க திணறி வருகிறார். போல்ட் கடந்த ஆகஸ்டு மாதம் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் மத்திய ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அறிவித்து இருந்தார்.
3-வது ஒருநாள் போட்டியில் மட்டும் ஆல்-ரவுண்டர் ஜிம்மி நீசம் இடம்பெற மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது திருமணத்துக்காக அப்போட்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதில் ஹென்றி நிக்கோலஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.
20 ஓவர் போட்டி: வில்லியம்சன் (கேப்டன்), பின் ஆலென், மைக்கேல் பிரேஸ்வெல், டேவன் கான்வே, டேரிஸ் மிட்செல், கிளைன் பிலிப்ஸ், ஜிம்மி நீசம், மிச்செல் சான்ட்னெர், பெர்குசன், சோதி, டிம் சவுதி, டிக்னெர், ஆடம் மில்னே.
ஒருநாள் போட்டி: வில்லியம்சன் (கேப்டன்), பின் ஆலென், டாம் லாதம், டேவன் கான்வே, மைக்கேல் பிரேஸ்வெல், டேரிஸ் மிட்செல், ஜிம்மி நீசம், பிலிப்ஸ், சான்ட்னெர், டிம் சவுதி, மேட் ஹென்றி, ஆடம் மில்னே, பெர்குசன்.