தேசிய விளையாட்டு போட்டி: தமிழகத்துக்கு மேலும் 4 தங்கம்
- நேற்றைய போட்டி முடிவில் தமிழக அணி 18 தங்கம், 17 வெள்ளி, 18 வெண்கலம் என 53 பதக்கங்களுடன் 4-வது இடத்தில் உள்ளது.
- மனயா முக்தா, அத்விகா, பிரமிதி, சக்தி ஆகியோர் அடங்கிய பெண்கள் அணி 4x200 மீட்டர் தொடர் நீச்சலில் 2-வது இடத்தை பிடித்து வெள்ளி வென்றது.
அகமதாபாத்:
36-வது தேசிய விளையாட்டு போட்டி குஜராத் மாநிலத்தில் 6 நகரங்களில் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் தமிழக அணி 14 தங்கம், 14 வெள்ளி, 18 வெண்கலம் என 46 பதக்கங்கள் பெற்று இருந்தது.
நேற்று தமிழக அணிக்கு 4 தங்கம் உள்பட 7 பதக்கங்கள் கிடைத்தது. ஸ்குவாஷ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் தமிழகத்தின் சுனைனா குருவில்லா தங்கம் வென்றார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தமிழக வீரர் அபய்சிங் தங்க பதக்கத்தை கைப்பற்றினார். ஆண்கள் அணிகள் பிரிவில் அபய்சிங், வேலவன் செந்தில்குமார், அரிந்தர் பால்சிங், நவனீத் பிரபு ஆகியோர் அடங்கிய தமிழக அணி தங்கப்பதக்கம் வென்றது.
மேலும் ஸ்குவாஷ் போட்டியில் இரண்டு வெள்ளி கிடைத்தது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் வேலவன் செந்தில் குமார் வெள்ளி பதக்கம் வென்றார்.
சுனைனா குருவில்லா, ரதிகா சீலன், சமீனா ரியாஸ், பூஜா ஆர்த்தி ஆகியோர் அடங்கிய தமிழக பெண்கள் அணி வெள்ளி பதக்கம் வென்றது.
டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தமிழகத்தின் மனீஷ் சுரேஷ்குமார் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். நீச்சல் போட்டியில் தமிழகத்துக்கு வெள்ளிபதக்கம் கிடைத்தது.
மனயா முக்தா, அத்விகா, பிரமிதி, சக்தி ஆகியோர் அடங்கிய பெண்கள் அணி 4x200 மீட்டர் தொடர் நீச்சலில் 2-வது இடத்தை பிடித்து வெள்ளி வென்றது.
நேற்றைய போட்டி முடிவில் தமிழக அணி 18 தங்கம், 17 வெள்ளி, 18 வெண்கலம் என 53 பதக்கங்களுடன் 4-வது இடத்தில் உள்ளது.