தேசிய விளையாட்டு போட்டி: தமிழக வீராங்கனை அர்ச்சனா புதிய சாதனை
- தேசிய விளையாட்டு போட்டியில் தடகளத்தில் தமிழக தடகள வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள்.
- ஆண்களுக்கான 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தமிழக வீரர் சதீஷ் வெண்கல பதக்கம் பெற்றார்.
அகமதாபாத்:
36-வது தேசிய விளையாட்டு போட்டி குஜராத் மாநிலத்தில் உள்ள 6 நகரங்களில் நடைபெற்று வருகிறது.
நேற்று நடந்த பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீராங்கனை அர்ச்சனா சுசீந்திரன் தங்கப்பதக்கம் பெற்றதோடு புதிய சாதனை படைத்தார். அவர் பந்தய தூரத்தை 23.06 வினாடியில் கடந்தார்.
இதில் பங்கேற்ற மற்ற தமிழக வீராங்கனைகளான சந்திரலேகா 5-வது இடத்தையும், கிரிதரணி 8-வது இடத்தையும் பிடித்தனர்.
இதே போல 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் பங்கேற்ற தமிழக வீராங்கனை வித்யாவும் தங்கம் வென்றதோடு புதிய சாதனை படைத்தார். அவர் பந்தய தூரத்தை 56.57 வினாடியில் கடந்தார். மற்ற தமிழக வீராங்கனைகளான திவ்யா 5-வது இடத்தையும், சுமித்ரா 6-வது இடத்தையும் பிடித்தனர்.
ஆண்களுக்கான 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தமிழக வீரர் சுரேந்தர் ஜெயக்குமார் வெள்ளிப்பதக்கம் பெற்றார். ஆண்களுக்கான 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தமிழக வீரர் சதீஷ் வெண்கல பதக்கம் பெற்றார்.
தேசிய விளையாட்டு போட்டியில் தடகளத்தில் தமிழக தடகள வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். தடகளத்தில் 7 தங்கம், 6 வெள்ளி, 5 வெண்கலம் ஆக மொத்தம் 18 பதக்கம் கிடைத்துள்ளது.
டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கல பதக்கம் கிடைத்தது. மனிஷ் சுரேஷ் குமார், சாய் சமிதா ஜோடிக்கு பதக்கம் கிடைத்தது.
நீச்சல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. ஆண்களுக்கான 50 மீட்டர் பிரீஸ்டைல் பிரிவில் தொடரில் பவன் குமார் இந்த பதக்கத்தை பெற்றார். ஸ்குவாஷ் பந்தயத்தில் ஹரீந்தர் பால்சிங் சிந்து வெண்கல பதக்கம் பெற்றுக் கொடுத்தார்.
நேற்றைய போட்டி முடிவில் தமிழக அணிக்கு 14 தங்கம், 14 வெள்ளி, 18 வெண்கலம் ஆக மொத்தம் 46 பதக்கம் கிடைத்தது. பதக்க பட்டியலில் தமிழ்நாடு 5-வது இடத்தில் உள்ளது.