டென்னிஸ்

அமெரிக்க ஓபனில் மிக நீண்ட போட்டி: 32 வருட சாதனையை முறியடித்த டான் எவன்ஸ்

Published On 2024-08-28 03:21 GMT   |   Update On 2024-08-28 03:21 GMT
  • டான் எவன்ஸ் மற்றும் கச்சனோவ் விளையாடிய ஆட்டம் 5 மணி நேரம் 35 நிமிடங்கள் நடைபெற்றது.
  • அமெரிக்க ஓபனில் மிக நீண்ட போட்டியை விளையாடி டான் எவன்ஸ் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாமான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் பிரிட்டனின் டான் எவன்ஸ் மற்றும் ரஷ்யாவை சேர்ந்த கரேன் அப்கரோவிச் கச்சனோவ் ஆகியோர் மோதினர்.

இந்த ஆட்டம் முதல் செட்டில் இருந்தே பரபரப்பாக சென்றது. முதலில் இந்த ஆட்டத்தை பார்க்க குறைந்த அளவு மக்களே இருந்தனர். ஆட்டத்தின் விறுவிறுப்பை தொடர்ந்து இந்த ஆட்டத்தை பார்க்க மக்கள் கூட்டம் அதிகரித்தது. எவன்ஸ் இறுதி செட்டில் 0-4 என்ற நிலையில் இருந்தார். இதனையடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 6-4 என கடைசி செட்டை கைப்பற்றி அசத்தினார்.

இறுதியில் டான் எவன்ஸ் 6-7(6), 7-6(2), 7-6(4), 4-6, 6-4 என்ற செட் கணக்கில் ரஷ்யாவின் கரேன் கச்சனோவை தோற்கடித்தார். இந்த ஆட்டம் 5 மணி நேரம் 35 நிமிடங்கள் நடைபெற்றது.

இதன்மூலம் அமெரிக்க ஓபனில் மிக நீண்ட போட்டியை விளையாடி பிரிட்டனின் டான் எவன்ஸ் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

இதற்கு முன்பு 1992-ம் ஆண்டு ஸ்வீடனின் ஸ்டீபன் எட்பெர்க் அரையிறுதியில் அமெரிக்க வீரரான மைக்கேல் சாங்கை தோற்கடித்தார். அந்த ஆட்டம் 5 மணி நேரம் 25 நிமிடம் நடைபெற்றது. இதுவே அமெரிக்க ஓபனில் நீண்ட போட்டியாக பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இந்த சாதனை தகர்க்கப்பட்டது.

எவன்ஸ் அடுத்த சுற்று ஆட்டத்தில் அர்ஜென்டினாவின் மரியானோ நவோனை எதிர்கொள்கிறார்.

Tags:    

Similar News