அமெரிக்க ஓபன்: தொடக்க சுற்று ஆட்டத்தில் அசரென்கா, கசட்கினா வெற்றி
- மரியா சக்காரி காயம் காரணமாக விலகினார்.
- இதனால் யபாங் வாங் வெற்றி பெற்று முதல் நபராக 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
நியூயார்க்:
ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாமான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நேற்று தொடங்கியது. செப்டம்பர் 8-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் நடப்பு சாம்பியன்கள் நோவக் ஜோகோவிச் (ஆண்கள் ஒற்றையர்), கோகோ காப் (பெண்கள் ஒற்றையர்) உள்பட முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 9-வது இடத்தில் இருக்கும் மரியா சக்காரி (கிரீஸ்), 80-ம் நிலை வீராங்கனையான சீனாவின் யபாங் வாங்கை எதிர்கொண்டார். இதன் முதல் செட்டை மரியா சக்காரி 2-6 என்ற கணக்கில் இழந்த நிலையில் தோள்பட்டை காயத்தால் அவதிப்பட்டார். இதற்காக மைதானத்தில் சிகிச்சை பெற்ற சக்காரி வலி தாங்க முடியாததால் போட்டியில் இருந்து விலகினார். இதனால் யபாங் வாங் வெற்றி பெற்று முதல் நபராக 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் 24-ம் நிலை வீராங்கனையான டோனா வெகிச் (குரோஷியா) 6-4, 6-4 என்ற நேர்செட்டில் ஆஸ்திரேலியாவின் கிம்பெர்லி பிரெல்லை விரட்டியடித்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். இன்னொரு ஆட்டத்தில் தரவரிசையில் 13-வது இடத்தில் இருக்கும் ரஷிய வீராங்கனை டாரினா கசட்கினா 6-2, 6-4 என்ற நேர்செட்டில் ஜாக்லின் கிறிஸ்டினை (ருமேனியா) வெளியேற்றினார்.
மற்ற ஆட்டங்களில் ரஷியாவின் எரிகா ஆன்ட்ரீவா 6-3, 7-6 (9-7) என்ற நேர்செட்டில் சீனாவின் யூ யுயானையும், பிரான்ஸ் வீராங்கனை டியானே பாரி 7-6 (7-2), 7-6 (7-5) என்ற நேர்செட்டில் ஜியு வாங்கையும் (சீனா), உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் மரியா லோர்டெஸ் கார்லியையும் (அர்ஜென்டினா), அசரென்கா 3-6, 6-1, 6-1 என்ற செட் கணக்கில் ஸ்டாரோதுப்ட்சேவாவை வீழ்த்தினர்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தொடக்க சுற்று ஆட்டம் ஒன்றில் பிரான்ஸ் வீரர் ஹூம்பெர்ட் 6-3, 6-4, 6-4 என்ற நேர்செட்டில் பிரேசிலின் தியாகோ மான்டிரோவை தோற்கடித்தார்.