விளையாட்டு

ஒரே தங்கம்- பதக்கப் பட்டியலில் பல நாடுகளை பின்னுக்கு தள்ளிய பாகிஸ்தான்

Published On 2024-08-09 15:01 GMT   |   Update On 2024-08-09 15:01 GMT
  • இந்தியா 5 பதக்கங்களுடன் 64-வது இடத்தில் உள்ளது.
  • ஒலிம்பிக் பதக்க பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

பாரிஸ்:

2024 பாரீஸ் ஒலிம்பிக் தொடரின் பதக்கப் பட்டியலில் இந்தியா மிகவும் பின்தங்கிய நிலைக்கு சென்றுள்ளது. இன்னும் மூன்று நாட்களில் ஒலிம்பிக் தொடர் முடிவடைய உள்ளது. இந்தியாவுக்கு இன்னும் சில போட்டிகளே மீதம் உள்ளன. அவற்றிலும் பதக்கம் வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன.

ஒலிம்பிக் தொடரின் பதக்கப் பட்டியல் தங்கப் பதக்கத்தின் அடிப்படையிலேயே வரிசைப்படுத்தப்படும். அதற்கு அடுத்து வெள்ளிப் பதக்கம் மற்றும் வெண்கல பதக்கங்களின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்படும். இதுவரை இந்தியா நான்கு வெண்கலப் பதக்கங்கள் மற்றும் ஒரு வெள்ளி என 5 பதக்கங்களுடன் 64-வது இடத்தில் உள்ளது.

அதே சமயம் பாகிஸ்தான் இந்த ஒலிம்பிக் தொடரில் ஒரே ஒரு தங்கப் பதக்கம் மட்டுமே வென்று உள்ளது. வேறு எந்த பதக்கமும் வெல்லவில்லை. ஈட்டி எறிதலில் பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் தங்கப் பதக்கம் வென்றார். அதன் மூலம் பாகிஸ்தான் பதக்கப் பட்டியலில் 53-வது இடத்தில் உள்ளது.

மொத்தமாக 5 முதல் 7 பதங்கள் வாங்கிய நாடுகள் கூட ஒரே ஒரு தங்கம் பதக்கம் வாங்கிய பாகிஸ்தானுக்கு பின்னால் தான் இருக்கிறது.

இந்தியா இனி தங்கப் பதக்கம் வென்றால் மட்டுமே பாகிஸ்தானை முந்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தியாவுக்கு கோல்ஃப், ஆண்கள் மற்றும் பெண்கள் 400 மீட்டர் ரிலே ரேஸ், மல்யுத்தத்தில் வெண்கல பதக்கத்துக்கான ஒரு போட்டி மற்றும் மகளிர் மல்யுத்தத்தில் 76 கிலோ எடை பிரிவு போட்டி ஆகியவை மட்டுமே மீதமுள்ளன. இவை எதிலும் இந்தியா தங்கப்பதக்கம் வெல்லும் என்ற எதிர்பார்ப்பு இல்லை.

தற்போது ஒலிம்பிக் பதக்க பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்கா 30 தங்கம், 38 வெள்ளி மற்றும் 35 வெண்கலத்துடன் மொத்தம் 103 பதக்கங்கள் வென்று முதல் இடத்தில் உள்ளது. 2-வது இடத்தில் இருக்கும் சீனா 29 தங்கம், 25 வெள்ளி மற்றும் 19 வெண்கலம் வென்று உள்ளது. 3-வது இடத்தில் ஆஸ்திரேலியா 18 தங்கம், 14 வெள்ளி மற்றும் 13 வெண்கலம் வென்றுள்ளது.

Tags:    

Similar News