முதலமைச்சர் விளையாட்டு போட்டி - கோப்பையை அறிமுகப்படுத்தினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
- முதலமைச்சர் விளையாட்டு போட்டிக்கான கோப்பையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார்.
- விளையாட்டுப் போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
சென்னை:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் சனிக்கிழமை முதல் வரும் 25-ம் தேதி வரை சென்னையில் 17 இடங்களில் நடைபெறுகிறது. இதில் கபடி, கைப்பந்து, கூடைப்பந்து, பளுதூக்குதல், செஸ், கால்பந்து, தடகளம் ஆகிய போட்டிகள் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
கிரிக்கெட் போட்டி அசோக் நகர், மெரினா கடற்கரை, குருநானக் கல்லூரி, சென்னை பல்கலைக்கழகம், லயோலா கல்லூரி, போரூர் எஸ்.ஆர்.எம். கல்லூரி ஆகிய இடங்களிலும், பேட்மிண்டன், சிலம்பம், டேபிள் டென்னிஸ், மாற்றுத்திறனாளி விளையாட்டுகள் மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்திலும், நீச்சல் போட்டி வேளச்சேரியில் உள்ள நீச்சல் குள வளாகத்திலும், டென்னிஸ் நுங்கம்பாக்கத்திலும், ஹாக்கி போட்டி ராமச்சந்திரா பல்கலைக்கழகத்திலும், பீச் வாலிபால் மெரினா கடற்கரையிலும் நடத்தப்படுகிறது.
இந்த போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து 27 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள், நடுவர்கள், அலுவலர்கள் மற்றும் தேசிய மாணவர் படை தன்னார்வலர்கள் பங்கேற்கிறார்கள். அவர்கள் தங்குவதற்கு வசதியாக சென்னையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அறைகள் மற்றும் மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவ, மாணவியர் விடுதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போட்டி நடைபெறும் அனைத்து நாட்களிலும் உணவு மற்றும் பேருந்து வசதி ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேரு உள்விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் கோப்பை போட்டிக்கான தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார்.
அதன்பின் பேசிய அவர், எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் மட்டுமே முதலமைச்சர் கோப்பை போட்டிகள் நடத்தப்படுகிறது. நம்பர் 1 விளையாட்டு வீரர்களை உருவாக்குவதே நமது இலக்கு என தெரிவித்தார்.