விளையாட்டு

மல்யுத்த தலைவருக்கு வலுக்கும் எதிர்ப்பு: விருதுகளை திருப்பி அளிக்க வினேஷ் போகத் முடிவு

Published On 2023-12-27 05:12 GMT   |   Update On 2023-12-27 05:12 GMT
  • புதிய மல்யுத்த தலைவருக்கு எதிர்ப்பு தெரிவித்து மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தும் விருதுகளை திருப்பி அளிக்க போவதாக கூறியுள்ளார்.
  • மல்யுத்த விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவரான சாக்‌ஷி மாலிக் கண்ணீர் மல்க அறிவித்தார்.

புதுடெல்லி:

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்த பிரிஜ் பூஷன் சரண் சிங், இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அவரை கைது செய்யக்கோரி நாட்டின் முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லியில் ஒரு மாதத்திற்கு மேலாக போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இதற்கிடையே, கடந்த 21-ந் தேதி நடந்த இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகிகள் தேர்தலில் பிரிஜ் பூஷனின் ஆதரவாளர்கள் பெருமளவில் வெற்றி பெற்றனர். அவரது நெருங்கிய கூட்டாளியும், உத்தரபிரதேச மல்யுத்த சங்க துணைத்தலைவருமான சஞ்சய் சிங் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரால் தங்களுக்கு எந்த விதத்திலும் நியாயம் கிடைக்கப்போவதில்லை, பிரிஜ் பூஷனின் ஆதரவாளர்கள் யாரும் மல்யுத்த நிர்வாகத்தில் இருக்கக்கூடாது என்று மல்யுத்த நட்சத்திரங்கள் மீண்டும் போர்க்கொடி தூக்கினர்.

மல்யுத்த விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவரான சாக்ஷி மாலிக் கண்ணீர் மல்க அறிவித்தார். மற்றொரு மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா தனக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை பிரதமர் இல்லத்திற்கு கடிதத்துடன் அனுப்பினார். வீரேந்திர சிங் யாதவும் தனது பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிக்கப்போவதாக அறிவித்தார்.

புதிய தலைவருக்கு நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுத்ததால் புதிய நிர்வாகிகளை கொண்ட இந்திய மல்யுத்த சம்மேளனத்தை மத்திய விளையாட்டு அமைச்சகம் இடைநீக்கம் செய்தது. இதன் நிர்வாக பணியை கவனிக்க இடைக்கால கமிட்டி அமைக்கும்படி இந்திய ஒலிம்பிக் சங்கத்ைத அறிவுறுத்தியது.

இந்த நிலையில் பஜ்ரங் பூனியா, வீரேந்திர சிங் யாதவ் வரிசையில் காமன்வெல்த் விளையாட்டு சாம்பியனான மல்யுத்த வீராங்கனை 29 வயதான வினேஷ் போகத்தும் இணைந்துள்ளார். அவர், விளையாட்டுத்துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருதான தயான்சந்த் கேல் ரத்னா மற்றும் அர்ஜூனா விருதுகளை அரசாங்கத்திடம் திருப்பி அளிக்க இருப்பதாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தை தனது 'எக்ஸ்' தளத்திலும் பகிர்ந்துள்ளார். அதில், 'ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற கனவு இப்போது மங்கி விட்டது. இந்த கனவு அடுத்து வரும் வீராங்கனைகளுக்கு நிறைவேற வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். ஒவ்வொரு பெண்ணும் கண்ணியத்துடன் வாழ்க்கையை வாழ வேண்டும் என்று விரும்புவார். கண்ணியத்துடன் வாழும் வாழ்க்கையில் விருது சுமையாகி விடக்கூடாது என்பதால் அதை திருப்பி அளிக்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News