null
முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி மீது போலீசார் வழக்கு பதிவு
- ஆண்ட்ரியா அளித்த புகாரின் பேரில் காம்ப்ளி மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பாந்த்ரா போலீசார் தெரிவித்துள்ளனர்.
- தாக்குதலில் காயம் அடைந்த ஆண்ட்ரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் போலீசார் கூறினர்.
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி. பள்ளி பருவத்தில் தெண்டுல்கருடன் இணைந்து இவர் உலக சாதனை புரிந்தார்.
வினோத் காம்ப்ளி ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி உள்ளார். தற்போது மனைவியை அடித்து துன்புறுத்திய வழக்கில் மாட்டியுள்ளார்.
51 வயதான வினோத் காம்ப்ளி மும்பை புறநகரான பாந்த்ரா மேற்கில் மனைவி ஆண்ட்ரியாவுடன் வசித்து வருகிறார். இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகன் உள்ளார்.
காம்ப்ளி தனது வீட்டில் இரவில் குடிபோதையில் மனைவியை அடித்து உதைத்து உள்ளார். சமையல் பாத்திரம் ஒன்றின் கைப்பிடியை எடுத்து மனைவி மீது வீசியுள்ளார். இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தை அவரது மகன் நேரில் பார்த்துள்ளார்.
வினோத் காம்ப்ளி மீது அளித்த புகாரில் அவரது மனைவி இதை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பாந்த்ரா போலீசார் விசாரணை நடத்தினர். வினோத் காம்ப்ளி மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய தண்டனை சட்டம் 324 (ஆபத்தை விளைவிக்கும் ஆயுதங்களால் காயம் ஏற்படுத்துதல்), 504 (அவமதிப்பு) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால் வினோத் காம்பளி எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வினோத் காம்ப்ளி 1993 முதல் 2000 வரையிலான காலக்கட்டத்தில் 17 டெஸ்ட் (1087 ரன்), 104 ஒருநாள் போட்டியில் (2477 ரன்) விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.