இந்திய வீராங்கனை கர்மன் தண்டி கால் இறுதிக்கு தகுதி பெறுவாரா? பவுச்சர்ட்டுடன் இன்று மோதல்
- வைல்டு கார்டு மூலம் நுழைந்த இந்திய வீராங்கனை அங்கீதா ரெய்னா முதல் சுற்றிலேயே தோற்று வெளியேறினார்.
- அலிசன் ரிஸ்கே (அமெரிக்கா) முதல் சுற்றிலேயே அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறினார்.
சென்னை:
சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கம் எஸ்.டி.ஏ.டி. மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியின் தர வரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் வார்வரா கிராசேவா நேற்றைய முதல் சுற்று ஆட்டத்தில் சக நாட்டை சேர்ந்த மரியா தகச்சேவாவை எதிர் கொண்டார். இதில் கிராசேவா 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
அவர் 2-வது சுற்றில் கனடாவை சேர்ந்த கரோல் ஜாவ்வை சந்திக்கிறார். கரோல் முதல் சுற்றில் 6-1, 6-1 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒலிவியாவை எளிதில் வீழ்த்தினார்.
மற்றொரு ஆட்டத்தில் 3-வது வரிசையில் இருக்கும் மக்டா லினெட் (போலந்து) 6-4, 6-0 என்ற செட் கணக்கில் ஜப்பானை சேர்ந்த மயூக்காவை வீழ்த்தினார். அவர் 2-வது சுற்றில் ரஷியாவின் ஒக்சானா செலக்மேடாவை சந்திக்கிறார். ஒக்சானா முதல் சுற்றில் 6-3, 6-1 என்ற கணக்கில் இங்கிலாந்து வீராங்கனை டெஸ்பினாவை வீழ்த்தினார்.
இந்த போட்டியின் முதல் நிலை வீராங்கனையான அலிசன் ரிஸ்கே (அமெரிக்கா) முதல் சுற்றிலேயே அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறினார். ரஷியாவை சேர்ந்த அனஸ்டசியா கசனோவா 6-2, 6-3 என்ற கணக்கில் அவரை வீழ்த்தினார்.
வைல்டு கார்டு மூலம் நுழைந்த இந்திய வீராங்கனை அங்கீதா ரெய்னாவும் முதல் சுற்றிலேயே தோற்று வெளியேறினார்.
போட்டியின் 3-வது நாளான இன்று 2-வது சுற்று ஆட்டங்கள் நடக்கிறது. இரவு 7 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை கர்மன் தண்டி முன்னணி வீராங்கனைகளில் ஒருவரான யூஜின் பவுச்சர்ட்டை (கனடா) எதிர் கொள்கிறார். பவுச்சர்ட்டை அதிர்ச்சிகரமாக வீழ்த்தி கர்மன் தண்டி கால் இறுதிக்கு தகுதி பெறுவாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற ஆட்டங்களில் ரெபேக்கா பீட்டர்சன் (சுவீடன்) லின்டா (செக் குடியரசு), கவா (போலந்து)-ரெபோக்கா மரினோ (கனடா), ஹிபினோ (ஜப்பான்) கியாங் வாங் (சீனா) மோதுகிறார்கள்.