சட்டசபை தேர்தலில் உறவினரை எதிர்த்து போட்டியிடும் வினேஷ் போகத்?
- அக்டோபர் 1-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது.
- வினேஷ் போகத் ஹரியானா மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஒலிம்பிக் போட்டியில் 50 கிலோ மகளிர் மல்யுத்த போட்டியில் வினேஷ் போகத் அரையிறுதியில் வெற்றி பெற்றும், இறுதிக்கு போட்டிக்கு தகுதி பெற்ற பின்னர் அவர் 100 கிராம் எடை அதிகமாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் இந்தியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. அவருக்கு பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலர் ஆதரவு தெரிவித்தனர்.
இதனையடுத்து சமீபத்தில் இந்தியா திரும்பிய வினேஷ் போகத்துக்கு உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் ஹரியானா மாநில அரசு அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தது.
இந்த நிலையில், வினேஷ் போகத் ஹரியானா மாநில சட்டசபைத் தேர்தலில் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஹரியானா மாநிலத்தில் சட்டசபையின் பதவிக்காலம் வருகிற நவம்பரில் நிறைவடைய உள்ளது. இதையடுத்து, அம்மாநிலத்திற்கு அக்டோபர் 1-ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான பணிகளில் அம்மாநிலக் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. இந்தச் சூழலில் ஓய்வை அறிவித்துள்ள மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகத், ஹரியானா சட்டசபை தேர்தலில் போட்டியிடலாம் என தகவல் வெளியாகி இருக்கிறது.
இது குறித்து அவரின் நெருங்கிய உறவினர் கூறுகையில்:- வருகின்ற ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் பபிதா குமாரி போகத்துக்கு எதிராக வினேஷ் போகத் களமிறங்க வாய்ப்புள்ளது. சில அரசியல் கட்சிகள் அவரை சம்மதிக்க வைக்க முயற்சித்து வருகின்றனர். எனத் தெரிவித்துள்ளார்.