கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை 10 சதவீதம் உயர்வு
- தண்ணீர் தட்டுப்பாட்டால் ஆந்திராவில் காய்கறி உற்பத்தி குறைந்துவிட்டது.
- பீன்ஸ், அவரைக்காய், கேரட் ஆகிய காய்கறிகளின் வரத்து வெகுவாக குறைந்து விட்டதால் அதன் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
போரூர்:
சென்னை கோயம்பேடு, காய்கறி மார்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, உத்தரபிரதேசம், மகாராஷ்டிர மாநிலங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது. தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அண்டை மாநிலமான கர்நாடகாவில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக கர்நாடகாவில் நடைபெற்று வரும் காய்கறி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
இதேபோல் தண்ணீர் தட்டுப்பாட்டால் ஆந்திராவில் காய்கறி உற்பத்தி குறைந்துவிட்டது. இதன் காரணமாக கோயம்பேடு சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்து குறைந்து உள்ளன. வழக்கமாக தினசரி 550 லாரிகளில் வந்து குவிந்த காய்கறிகள் தற்போது 450 லாரிகளாக குறைந்து விட்டது. இதனால் காய்கறி விலை வழக்கத்தை விட 10 சதவீதம் அதிகரித்து உள்ளன. பீன்ஸ், அவரைக்காய், கேரட் ஆகிய காய்கறிகளின் வரத்து வெகுவாக குறைந்து விட்டதால் அதன் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
கடந்த வாரம் மொத்த விற்பனையில் ஒரு கிலோ பீன்ஸ் ரூ.60-க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது அதன் விலை மேலும் அதிகரித்து ரூ.80-க்கு விற்கப்படுகிறது. வெளி மார்க்கெட்டில் உள்ள கடைகளில் பீன்ஸ் ஒரு கிலோ ரூ100 வரை விற்பனை ஆகிறது. அதேபோல் ஊட்டி கேரட் விலையும் தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது.