கூடங்குளம் 2-வது அணு உலையில் மின்உற்பத்தி நிறுத்தம்: 1,000 மெகாவாட் மின்உற்பத்தி பாதிப்பு
- முதல் மற்றும் 2-வது அணுஉலையில் இருந்து தலா 1,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
- விரைவில் பணிகள் சரிசெய்யப்பட்டு மின்உற்பத்தி தொடங்கும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டு உதவியுடன் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. அதன்படி முதல் மற்றும் 2-வது அணுஉலையில் இருந்து தலா 1,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இந்த இரு அணு உலைகளில் இருந்தும் உற்பத்தியாகும் மின்சாரம் நெல்லை அபிஷேகப்பட்டியில் உள்ள மத்திய மின் தொகுப்பில் இணைக்கப்பட்டு மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3,4-வது அணு உலைகள் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் 2-வது அணு உலையில் இன்று ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அங்கு மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக அங்கிருந்து உற்பத்தியாகும் 1,000 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இதைத்தொடர்ந்து பழுதை சரி செய்யும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.
விரைவில் பணிகள் சரிசெய்யப்பட்டு மின்உற்பத்தி தொடங்கும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. முதலாவது அணு உலையில் இருந்து வழக்கம் போல் 1,000 மெகாவாட் மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது.