தமிழ்நாடு

நீலகிரியில் 11 புலிகள் பலியான சம்பவம்: தேசிய புலிகள் காப்பக ஆணைய ஐ.ஜி. நேரில் விசாரணை

Published On 2023-09-25 08:25 GMT   |   Update On 2023-09-25 08:25 GMT
  • சின்னக்குன்னூா் பகுதியில் கடந்த 19-ந்தேதி 4 புலிக்குட்டிகள் பட்டினியால் இறந்தன.
  • நீலகிரி மாவட்டத்தில் கடந்த 33 நாட்களில் மட்டும் இதுவரை 11 புலிகள் பலியாகி உள்ளன.

ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் கடந்த சில மாதங்களாக புலிகள் சாவு தொடர்கதையாக உள்ளது. அங்கு கடந்த ஆகஸ்டு மாதம் 16-ந்தேதி சீகூரில் 2 புலிக்குட்டிகள் பட்டினியால் இறந்தன. இதற்கு அடுத்த நாள் நடுவட்டத்தில் ஒரு புலி செத்து கிடந்தது.

முதுமலையில் ஆகஸ்டு மாதம் 31-ந் தேதி ஒரு புலியும், அவலாஞ்சி பகுதியில் செப்டம்பா் 9-ந்தேதி ஒரு புலியும் விஷம் வைத்து கொல்லப்பட்டன. சின்னக்குன்னூா் பகுதியில் கடந்த 19-ந்தேதி 4 புலிக்குட்டிகள் பட்டினியால் இறந்தன.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 33 நாட்களில் மட்டும் இதுவரை 11 புலிகள் பலியாகி உள்ளன. இதுகுறித்து வனத்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில் தேசிய புலிகள் காப்பக ஆணைய ஐ.ஜி. முரளி தலைமையில் அதிகாரிகள், இன்று காலை முதுமலைக்கு வந்தனர். அங்கு அவர்கள் புலிகள் இறந்து கிடந்த பகுதிகள் மற்றும் சாவுக்கான காரணம் ஆகியவை குறித்து தீவிர விசாரணை நடத்துகிறார்கள்.

முதுமலையில் 2 நாட்கள் தங்கியிருக்கும் தேசிய புலிகள் காப்பக ஆணைய அதிகாரிகள், நீலகிரி மாவட்டத்தில் ஒரே மாதத்தில் 11 புலிகள் பலியானதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்ய உள்ளனர்.

அதன்பிறகு இறுதிகட்ட விசாரணை அறிக்கை, தேசிய புலிகள் காப்பக ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Tags:    

Similar News