11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்: தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு
- சைதாப்பேட்டை அபித்காலனியில் சிறப்பு மருத்துவ முகாமும், நோய்த் தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது.
- மருத்துவ முகாமினைத் தொடர்ந்து மூன்று நாட்கள் நடத்தப்படவும், அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
சென்னை மாநகராட்சி கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் ஆணையாளர் ராதாகிருஷ்ணன் சைதாப்பேட்டை அபித் காலனியில், மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள மருத்துவ முகாம் மற்றும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
சைதாப்பேட்டை அபித் காலனியில் உள்ள வெளி மாநிலத் தொழிலாளி ராஜேஷ்குமார் என்பவரின் மகன் யுவராஜ் (வயது 11) என்பவர் நோய்த் தொற்றின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்ததைத் தொடர்ந்து,
சைதாப்பேட்டை அபித்காலனியில் சிறப்பு மருத்துவ முகாமும், நோய்த் தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது.
இதனை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் ஆணையாளர் ராதாகிருஷ்ணன் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் இப்பகுதி மக்களுக்கு பிளிச்சீங் பவுடர், ஓ.ஆர்.எஸ் கரைசல், ஆகியவற்றினையும் இப்பகுதி மக்களிடம் வழங்கி, வீட்டின் குடிநீர்த் தொட்டியினை சுத்தம் செய்திடவும், சுற்றுப்புறப் பகுதியினை தூய்மையாக வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தி, விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களையும் வழங்கினார்.
இப்பகுதியில் 12 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு டாக்சி சைக்ளின் (Doxycycline) மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளதையும், லைசால், பிளீச்சிங் பவுடர் (Lysol, Bleaching powder) கொண்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளதையும், மக்களிடம் மருத்துவப் பணியாளர்கள் மேற்கொண்ட மருத்துவப் பரிசோதனை நடவடிக்கைகளையும் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.
இப்பகுதிக்கு வழங்கப்படும் குடிநீரில் குளோரின் உள்ளதை உறுதி செய்யப்பட்டுள்ளதோடு, இப்பகுதியில் தொடர் கண்காணிப்பினை மேற்கொள்ளவும், இம்மருத்துவ முகாமினைத் தொடர்ந்து மூன்று நாட்கள் நடத்தப்படவும், அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். முன்னதாக சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை மற்றும் மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனை ஆகியவற்றினை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் ஆணையாளர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்வின் போது மத்திய வட்டார துணை ஆணையாளர் பிரவீன் குமார், மண்டலக் குழுத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாநகர நல அலுவலர் ஜெகதீசன், கூடுதல் மாநகர நல அலுவலர் ஆஷாலதா, சென்னைக் குடிநீர் வாரியம், மாநகராட்சி அலுவலர்கள், மருத்துவப் பணியாளர்கள் உடனிருந்தனர்.